மலையாள சினிமாவில் ஒப்பீட்டளவில் மாஸ் மசாலா ஆக்ஷன் படங்கள் குறைவு. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அங்கு அவ்வப்போது சில மாஸ் படங்கல் வெளியானாலும் அவற்றில் எப்போதும் ரசிகர்கள் மனதில் முதன்மையாக இடம்பெறும் படம் என்று ‘லூசிஃபரை’ சொல்லலாம். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன். தனது ஆதர்ச மோகன்லாலை அதுவரை எந்த இயக்குநரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் காட்டிருந்தார். மாபெரும் எதிர்பார்ப்புடன் இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘எல்2: எம்புரான்’ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
முதல் பாகத்தில் மாநில முதல்வரின் இறப்புக்குப் பிறகு புதிய முதல்வராக பதவியேற்ற அவரது மகன் ஜதின் ராமதாஸ் (டொவினோ தாமஸ்) தன் மீதான அவப்பெயரை களையும் நோக்கில் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறார். இதற்காக அக்கட்சியின் தலைவரான பால்ராஜ் படேல் (அபிமன்யு சிங்) உடன் கைகோர்க்கிறார். இதற்கு முதல்வரின் சகோதரி ப்ரியதர்ஷினி (மஞ்சு வாரியர்) கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் இருக்கிறார்.
முதல்வரின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறது. இப்படியான சூழலில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீஃபர்ன் நெடும்பள்ளி (மோகன்லால்), பத்திரிகையாளர் கோவர்தனின் (இந்திரஜித்) முயற்சியால் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். ஹீரோவால் தனது மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா? பால்ராஜ் உடனான அவருக்கு என்ன பகை? பால்ராஜுக்கும் சையது மசூதுக்குமான (பிருத்விராஜ்) தொடர்பு என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘எல்2: எம்புரான்’.
கதை 2002 குஜராத் கலவர பின்னணியில் இருந்து விரிகிறது. கலவரத்தில் ஆதவற்று நிற்கும் சையது மசூத் என தொடங்கி கேரள அரசியல் தொடர்பான காட்சிகள் என சென்று அதன் பிறகு மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி நகர்ந்து அங்க ஒரு பாலைவனத்தில் ஹீரோ மாஸ் என்ட்ரி கொடுக்கும்போது சுமார் ஒரு மணி நேரம் கடந்து விடுகிறது. ‘லூசிஃபர்’ முதல் பாகத்திலேயே கூட நீண்ட கதாபாத்திர அறிமுகங்கள் முதல் அரை மணி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். ஆனால் மோகன்லால் அறிமுகத்துக்குப் பிறகு திரைக்கதையில் நடக்கும் மேஜிக், அதன் பின்னர் க்ளைமாக்ஸ் வரை நம்மை கட்டிப் போட்டு விடும். ஆனால், அந்த மேஜிக் ‘எம்புரானில்’ எங்கு நிகழாமல் போனது சோகம்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு பிரேமும் கூட பிரம்மாண்டமாய் திரையில் தெரிய வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து உழைத்திருக்கிறது இயக்குநர் பிருத்விராஜ் உள்ளிட்ட படத்தின் டீம். சுஜித் வாசுதேவனின் கேமரா, தீபக் தேவின் பின்னணி இசை, அகிலேஷ் தேவின் எடிட்டிங் என அனைத்தும் கதைக்கு தேவையானதை மிகச் சிறப்பாக தந்திருக்கின்றன. ஆனால் இவற்றை தாங்கிப் பிடிக்கும் அச்சாணியான திரைக்கதையில் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரான முரளி கோபியும் கோட்டை விட்டிருக்கின்றனர்.
ஒட்டுமொத்த முதல் பாதியுமே இடைவேளையை நோக்கி நகரும்படி எழுதப்பட்டிருந்துமே கூட ஆடியன்ஸுக்கு உற்சாகமூட்டும் காட்சிகள் இடம்பெறாதது (ஹீரோ என்ட்ரி தவிர்த்து) ஏமாற்றம் தருகிறது. அப்படியாக எழுத முயற்சித்துள்ள காட்சிகளும் எளிதில் யூகிக்கும்படி இருக்கிறது. முதல் பாதி இப்படியென்றால் இரண்டாம் பாதி இன்னும் அதளபாதாளத்துக்கு சென்று விடுகிறது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் படத்தில் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடமுடியும். நெடும்பள்ளியில் மஞ்சு வாரியர் உரையாற்றுவது, அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் உள்ளிட்டவை உதாரணம். படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் அதன் சண்டைக் காட்சிகள். குறிப்பாக காட்டில் நடக்கும் ஒரு ஆக்ஷன் காட்சி உலகத் தரம். ஸ்டன்ட் சில்வா தெறிக்க விட்டிருக்கிறார்.
மோகன்லால் முதல் பாகத்தை காட்டிலும் இதில் படு ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். நடிப்புக்கு வேலை இல்லையென்றாலும் படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார். பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்ப்ட செய்துள்ளனர். இயக்குநராக பிருத்விராஜுக்கு இது 3-வது படம். பல இடங்களில் அவர் தனித்து தெரிகிறார். உதாரணமாக, குஜராத் தொடர்பான காட்சிகளை காட்டிய விதம் சிறப்பு. அவசியம் இருந்தும் கூட வன்முறைகளை அப்பட்டமாக காட்டாமல் தவிர்த்தது பாராட்டுக்குரியது.
முதல் பாகத்தில் ஒரு போலீஸ்காரரின் நெஞ்சில் மோகன்லால் காலை தூக்கி வைக்கும் காட்சி பெரும் புகழ்பெற்றது. அதை இங்கு இருவர் சேர்ந்து செய்வது போல ரீக்ரியேட் செய்தது நல்ல ஐடியா. ஆனால் அது முன்னதைப் போல எந்த தாக்கத்தையும் தரவில்லை. அரங்கம் அதிர்ந்து அல்லோல கல்லோலப்பட்டிருக்க வேண்டிய காட்சியில் மயான அமைதி நிலவுகிறது.
எதிர்பாராத் ட்விஸ்ட், திரைக்கதையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் நாம் எதை எதிர்பார்த்தோமோ அதை நோக்கியே க்ளைமாக்ஸ் நகர்வதால் ஒருவழியா முடிந்தால் போதும் என்ற எண்ணம் எழுவதை தடுக்கமுடியவில்லை. படத்தில் நீளமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மொத்தத்தில் முதல் பாகத்தில் மாஸ் மசாலாவை தாண்டி இருந்த நேட்டிவிட்டியை ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க பான் இந்தியா ஆடியன்ஸை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனை முயற்சி நம்மை கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கிறது.