பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதை முகாம்கள்

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை (29) தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களுடன கலந்துரையாடல் இடம்பெற்றது.

வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைளை முன்னெடுப்பது, அவர்களது நடவடிக்ககைகள் மற்றும் கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாக இங்கு பேசப்பட்டது.

மூன்று வருடத்திற்கு முன்னர் நடந்த வேண்டிய இந்த தேர்தலை நாம் ஆட்சிக்கு வந்தவுடனேயே நடத்துகின்றோம். அரசாங்கம் ஒவ்வொரு செயற்பாடுகளையும் கட்டம் கட்டமாக செய்து வருகின்றது.

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. நாம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகியுள்ளது.

ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் அதனை படிப்படியாக அதற்கான செயன்முறைகள் ஊடாகத் தான் செய்ய முடியும். காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கின் கைத் தொழிற்சாலைகளை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எமது அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கூட முன்னைய அரசாங்கங்கள் ஒதுக்காத அளவு அதிக நிதியை நாம் வடக்கிற்கு ஒதுக்கியுள்ளோம்.

ஆகவே சில நடைமுறைகளை பின்பற்றி தான் செய்ய வேண்டும். அந்த நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

பட்டலந்த போன்று பல வதை முகாம்கள் அந்தக் கலப்பகுதியில் இருந்துள்ளன. 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியல் படலந்த வதை முகாம் மாதிரி பல வதை முகாம்கள் இருந்தன.

தெற்கில் ஜேவிபி, யுஎன்பி பிரிந்து இருந்தது போன்று, வடக்கு – கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ., புளொட், ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள்.

வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள். முதல் கட்டமாக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பட்டலந்த வதைமுகாம் விவாதம் ஆரம்பிக்கப்படும்.

எல்லாப் பிரச்சினைகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Related posts