எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது.
இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதால் வலதுசாரி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. .
என்றாலும் இந்தப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதனையொட்டி, இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்து நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளத்தில், “‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் வந்துள்ள சில அரசியல் மற்றும் சமூகக் கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை அறிந்தேன்.
ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை.
எனவே, எனது அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும் எம்புரான் குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். இப்படத்திலிருந்து இதுபோன்ற காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்த நான்கு தசாப்தங்களாக எனது திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன்.
உங்கள் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.