ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
‘அந்தகன்’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடிக்க பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள்.
இன்று (ஏப்ரல் 6) பிரசாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய 55-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பிரசாந்த் 55-வது படத்தினை ஹரி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி – பிரசாந்த் இணையும் படத்தினை தியாகராஜன் தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
தற்போது இதில் நடிப்பதற்கான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக தொடங்கவுள்ளது.
‘ரத்னம்’ படத்துக்குப் பிறகு ஹரியும் பல்வேறு நடிகர்களிடம் கதைகள் கூறிவந்தார். இறுதியாக பிரசாந்த் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹரி இயக்குநராக அறிமுகமான முதல் படமான ‘தமிழ்’ படத்தின் நாயகன் பிரசாந்த் தான்.
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஹரி – பிரசாந்த் கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.