இலங்கையின் சனத்தொகை வட மாகாணத்தில் 5.3 சதவீதம் பேர் !

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத் தொகை 21,763,170 ஆகும். அதாவது, இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் சனத்தொகை 14 இலட்சம் அதிகரித்து காணப்படுகிறது.

15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 முதல் பெப்ரவரி மாதம் 2025 இரண்டாவது வாரம் நிறைவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு வரை பதிவு செய்யப்பட்டது.

நாட்டின் வருடாந்திர சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதத்திலிருந்து (2001–2012) 0.5 சதவீதமாக (2012–2024) குறைந்துள்ளதாக அறிக்கை காட்டுகிறது.

சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் சனத்தொகை வளர்ச்சியில் மந்தநிலை காணப்படுகிறது.

மேல் மாகாணம் அதிக சனத் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது, அங்கு மொத்த சனத் தொகையில் 28.1 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

அதேவேளை, 5.3 சதவீதம் பேருடன் வடக்கு மாகாணம் குறைந்தளவான சனத்தொகையை கொண்ட மாகாணமாக உள்ளது.

2,433,685 பேருடன் கம்பஹா மாவட்டம் சனத்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 2,374,461 பேருடன் கொழும்பு மாவட்டம் அதிகளவான சனத் தொகையை கொண்டுள்ளது.

குருணாகல், கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களும் தலா 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.

மறுபுறம், வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்தளவான சனத்தொகை கொண்ட மாவட்டங்களாக தொடர்ந்து காணப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் 2.23 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதேவேளை வவுனியா 0.01 சதவீதத்துடன் மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது.

கொழும்பு மாவட்டம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேருடன் அதிக சனத் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதேவேளை முல்லைத்தீவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் வசிக்கின்றார்கள்.

Related posts