அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் உருவாக்கத்துக்காக ஹாலிவுட் நிறுவனங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோத்துள்ளனர்.
‘புஷ்பா 2’ படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இன்று அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுடன் அட்லீ – அல்லு அர்ஜுன் இருவரும் பேசுவது, பின்பு அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட் நிறுவன கலைஞர்களுடன் உரையாடுவது என 2:34 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ பதிவின் மூலம் உலக தரத்தில் பிரம்மாண்ட படமொன்றை இருவரும் இணைந்து உருவாக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற விவரம் எதையும் படக்குழு வெளியிடவில்லை. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த வீடியோ பதிவுக்கு சாய் அபயங்கர் தான் பின்னணி இசை அமைத்துள்ளார். ஆனால், படத்துக்கு இசை யார் என்பது விரைவில் தெரியவரும்.
ராஜமவுலி இயக்கிவரும் படத்துக்குப் பிறகு, இப்படம் தான் இந்திய அளவில் அதிகப் பொருட்செலவில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்காக அல்லு அர்ஜுன் – அட்லீ இருவருக்குமே மிகப் பெரிய சம்பளத்தைக் கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.