நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா: ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளர் விளக்கம்

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் மைத்ரி முவி மேக்கர்ஸ் ரவி சங்கர் விளக்கம் அளித்துள்ளார். “அந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையே அனுமதி பெற்றுள்ளோம். அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். தடையில்லா சான்றும் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறும்போது, “இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை.

அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும்” என்றார்.

Related posts