தமிழகத்தில் ‘குட் பேட் அக்லி’ புதிய வசூல் சாதனை!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு வார வசூல் என்ன என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ‘குட் பேட் அக்லி’ நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அவ்வப்போது வசூல் நிலவரத்தை அறிவித்து வருகிறார்கள். தற்போது 2 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.172.3 கோடி வசூல் செய்திருப்பதாக தமிழக விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கி உள்ளது.
விஸ்வாசம்’ பட வசூலை முறியடித்து, தமிழகத்தில் அதிக வசூல் செய்த அஜித் படங்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘குட் பேட் அக்லி’. அத்துடன், 2025-ல் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலும் முதலிடம் வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக, உலக அளவில் ரூ.250 கோடி வசூலை இப்படம் நெருங்கியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இதில் த்ரிஷா, சிம்ரன், சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார்.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதனையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரபூர்வமாக அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts