இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம்” – ‘டூரிஸ்ட் ஃபேமிலி

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்று சமுத்திரக்கனி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே பல்வேறு இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
டூரிஸ்ட் பேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்த நூற்றாண்டில் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படம் பார்த்தவுடன் அவ்வளவு கனமாக இருந்தது, பெருமையாகவும் இருந்தது.
இப்படம் பார்த்தவுடன் சசிகுமாரை கையெடுத்து கும்பிட வேண்டும் என தோன்றியது. இப்படியொரு படம் இதுவரை யாரும் எடுத்ததில்லை. உலகத்தில் இருக்கும் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும். சசிகுமாருக்கு ‘சுப்பிரமணியபுரம்’, எனக்கு ‘நாடோடிகள்’ போல் அபிஷனுக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’” என்று பேசினார் சமுத்திரக்கனி.
மேலும் இயக்குநர் சசி, தா.செ.ஞானவேல், விஜய் ஆண்டனி, ராஜுமுருகன், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை வாழ்த்தி இந்த விழாவில் பேசினார்கள்.

Related posts