இன்னும் ஓரிரு நாட்களில் புதிய பெயரில் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக, நடிகர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், “2016 -ம் ஆண்டுக்குப் பிறகு சில நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தேன்” என தெரிவித்தார்.
அவரிடம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்திக், “பகுதி நேர அரசியல்வாதியாக இருக்கக் கூடாது. அது எனக்கும் பொருந்தும். இனி முழு நேர அரசியலில் இறங்கியுள்ளேன். அரசியலில் அவர்கள் இருவருக்கும் நான் சீனியராக இருக்கலாம். ஆனால், வயதிலும், சினிமாவிலும் அவர்களுக்கு நான் ஜூனியர். ஆனால், நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்பதை கர்வத்துடன் சொல்வேன்” என தெரிவித்தார்.
மறைந்த மூத்த நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கார்த்திக், பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
சரிவர பணியாற்றவில்லை எனக்கூறி அவர் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2009-ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். ஆனாலும், அவர் தன் அரசியல் பணிகளிலிருந்து கடந்த சில வருடங்களாக ஒதுங்கியே இருந்தார்.