சிறீலங்கா அரசியலில் ஏதோ ஒன்று நடந்து கொண்டிருப்பது கடந்த சில தினங்களாகவே சந்தேகத்தை கிளப்பியிருந்தது.
காடு சுட எலி புறப்படும்.. அல்லது மலிந்தால் சந்தைக்கு வரும் என்பது போல அந்த ஊமைப் பொழுதுகளின் உண்மை இப்போது வெளி வந்திருக்கிறது.
எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக.. சற்று முன் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.
என்றால் ரணில் விக்கிரமசிங்க இப்போது எங்கே என்ற கேள்விகளுக்கான பதில் இதுவரை இல்லை.
என்னது.. மகிந்த பிரதமரா..? புலம் பெயர் நாடுகளில் இந்த செய்தி கன வேகத்தில் பரவ ஆரம்பித்தது. இது வதந்தியா இல்லை உண்மையா என்ற சந்தேகத்தில் தொலை பேசிகளும் வாட்ஸ் ஆப் வைப்பர்களும் கதறிக் கொண்டிருக்கின்றன.
நேற்று வடக்கே சி.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிக்க, இன்று தெற்கே மகிந்த பிரதமராக ஆகியிருக்கிறார். இப்படி எதிர்பாராத புதிய மாற்றங்கள் சட்டென நிகழ்ந்துள்ளன.
அதேவேளை எதிர்க்கட்சி தலைவரின் நிலை என்ன..?
நல்லாட்சி அரசு கலைந்தால் கூட்டமைப்பு பெரும்பான்மையை இழக்கும். எதிரணி அரசுடன் சேர்ந்தியங்க வேண்டிய தேவை இல்லை. வரும் நாட்களில் சம்மந்தரின் எதிர்க்கட்சி தலைவர் பதவி கேள்விக்குறியானாலும் ஆச்சரியப்பட இல்லை.
அப்படியானால் கூட்டமைப்பு எதிர் பார்த்த தீர்வுத்திட்டம் மறுபடியும் இலவு காத்த கிளியின் கதைதானா..?
உருண்டு கொண்டிருக்கின்றன கடதாசிக் கூட்டங்கள்.
சரி.. மகிந்த பிரதமராவதற்கான காரணம் என்ன..? அப்படியானால் சந்திரிகா அம்மையாரின் நிலை என்ன..?
கோத்தபாயவும் மைத்திரியும் எதிரிகள் அப்படியிருக்க இருவரையும் கொல்ல முயன்றது ஏன்..? பஷில் ராஜபக்ஷ அதிபர் வேட்பாளர் என்று கோத்தபாய கூறியதன் நோக்கம் என்ன..?
செய்திகள் ஒன்றோடு ஒன்று பின்னி நிற்கின்றன..
போர்க்குற்றம் எங்கே.. விசாரணை எங்கே.. ஊழல் குற்றச்சாட்டு எங்கே என்று கேள்விகள் கேள்வி மேல் கேள்வியாக தொடர்கின்றன.
இதற்குள் சி.வி.விக்னேஸ்வரனை இனவாத கட்சி ஒன்றை ஆரம்பித்துவிட்டதாக சரத் பொன்சேகா குறை கூறியிருக்கிறார்.
சி.வி.விக்னேஸ்வரனைவிட சரத் பொன்சேகாவின் பெரிய எதிரி மகிந்த ராஜபக்ஷ ஆகவே அவருடைய எதிர்காலம் என்ன..?
பலத்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குள் ஜனாதிபதியை கொல்ல நடந்த சதி தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றன.
வடக்கு அரசியலைவிட தெற்கு அரசியலில் பெரிய சூறாவளி ஆரம்பித்துள்ளது.
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..
அலைகள் 26.10.2018