தமிழகத்தில் ஒரு திரைப்படம் 100 கோடி வசூலை தொடுமாக இருந்தால், அது ஆளும் கட்சியின் ஆதரவை பெறாவிட்டால் அந்தப்படம் சர்ச்சைக்குள்ளாவது வழமையாக இருக்கிறது.
சர்க்கார் திரைப்படம் போல முருகதாசின் கத்தி திரைப்படத்தின் வசூலும் இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பு வரவில்லை. படம் இலகுவாக கோடிகளை புரட்டி எடுக்க எந்தத் தடையும் இருக்கவில்லை ஏன்..?
கத்தி ஓடும் என்றால் சர்க்கார் ஏன் ஓடாது..?
அந்தப்படத்தின் பணம் வந்த வழி என்ன.. இந்தப்படத்தின் பணம் வந்தவழி என்ன..?
கத்தியில் தாணு இருந்தார்.. இப்போது அவருடைய சத்தமே இல்லை.. ஏன்..?
சர்க்காரில் சன் கலாநிதி மாறனின் பணம் விளையாடியது.. படம் சர்ச்சையில் மாட்டிவிட்டது. படத்தை எதிர்ப்பது அதிமுக கட்சியின் முக்கிய அமைச்சர்கள்.
ஆக, விவகாரம் அதிமுக – திமுக என்ற இரண்டு திராவிடக்கட்சிகளின் பிழைப்பு வாதத்திற்குள் சிக்கிவிட்டதைக்காண முடிகிறது.
சர்க்கார் திரைப்படத்தைவிட மோசமான விமர்சனங்கள் கொண்ட பல படங்கள் வந்துள்ளன. உதாரணம் மூடர்கூடம். அவற்றின் மீது இது போன்ற ஆபத்துக்கள் வரவில்லை. உண்மையில் ஒரு படம் 100 கோடியை தொடும்போதுதான் இந்தப் பூதம் எழும்புகிறது என்ற கோணத்தில் விவகாரம் பார்க்கப்படவில்லை.
ஆக.. கப்பம்தான் பிரச்சனையா என்ற சந்தேகத்தை இத்தகைய நிகழ்வுகள் இயல்பாகவே ஏற்படுத்திவிடுகின்றன. பலரும் கூறுவது போல உண்மையில் அரசியல் சகிப்புத்தன்மை இல்லாமை இதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்புக்கள் வெகுவாகவே குறைவு.
படத்தின் கதைதான் காரணமென்றால் இந்தக் கதை திருடப்பட்ட கதை என்பதை ஒப்புக்கொண்டு பணம் கொடுத்தரே எழுத்தாளருக்கு. ஆகவே அந்த எழுத்தாளருக்கு எதிராக எதுவும் நடைபெற்றதா என்று பார்த்தால் அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.
எனவேதான் கதையா..? காசா..? என்ற கேள்வி எழுகிறது.
கொடுக்க வேண்டியதை வீடு தேடி சென்று கொடுப்பதால் எனது படத்திற்கு பிரச்சனை இல்லையென்று முக்கிய தமிழ் நடிகர் ஒருவர் முன்னர் கூறியிருந்தார். அவர் இரண்டு அணிக்கும் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தது ஊடகங்களில் வெளியானது இதற்கு உதாரணம்.
கமலின் விஸ்வரூபம் இதே பிரச்சனையை சந்தித்தது ஏன்..? அதுபோல விஜய்யின் காவலன் ஓட முடியாமல் போனது ஏன்..?
இம்சையரசன் 23ம் புலிகேசி நூறு கோடிகளை உழைக்கப்போகிறது என்று தெரிந்ததும் வடிவேலு சந்தித்த நெருக்கடிகள் என்ன..? ஈற்றில் அவர் அரசியலில் ஈடுபட்டு, அவருடைய சினமா வரலாறே அடிபட்டு போனது எப்படி..?
இம்சையரசன் எந்த அரசியலை பேசியது..?
எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபனில் இருந்து இந்தச் சிக்கல் தொடர்கிறது. உண்மையில் பேய்களுக்கு பிய்த்து போடாமல் உழைக்க முடியாது.. என்பதுதான் அடிப்படைச் சிக்கல்.
வெளிநாட்டில் ஒரு படம் எடுத்தால்.. அது உழைக்கும் என்றால் புலம் பெயர் தமிழரும் பகிஷ்கரிக்கிறார்கள்.. அதற்கு காரணம் என்ன அரசியலா.. இல்லை.. இங்கும் பேய் வரக் காரணம் பணம்தான்.
அப்படியாயின் விஜய்க்கு ஏன் இந்த தேவையற்ற வேலை என்பதுதான் கடைசிக்கேள்வி.. அவர் சம்பளத்தை ஒரு ரூபா குறையாமல் வாங்கிவிட்டார்.. சன் ரீவி விட்ட பணத்தை தேனாண்டாளுக்கு விற்று உழைத்துவிட்டது.
ஆக பிரச்சனை அரசியல் அல்ல.. வேறு ஏதோ ஒன்றுதான் என்று ஏன் சிந்திக்கக் கூடாது..?
இது விஜய்யின் பிரச்சனையல்ல அரசியலை எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் கொடுக்க வேண்டியதை முன்னரே பூதத்திற்கு கொடுக்காவிட்டால் இப்படித்தான் அவருடைய படங்களுக்கு பிரச்சனை வரும். இது ரஜினி படத்திற்கும் பொருந்தும்.
சர்க்கார் படத்தை ஒரு புது நடிகரை போட்டு எடுங்கள்.. பூதம் திரும்பியும் பார்க்காது.. உண்மையில் பிரச்சனை என்பது அரசியல் அல்ல.. பணம்..! இன்று ஒருவன் அதிக பணத்தை உழைக்க முடியாது.. உழைத்தால் பூதம் வரும்.
இப்போது.. லைக்கா என்ற நிறுவனம் பெரிய படங்களை எல்லாம் எடுக்கிறது.. அவர்களுடைய வேரைத்தேடி மேலை நாடுகள் போய்விட்டன. லைக்கா நிறுவனத்தின் கறுப்புப் பணம் பற்றிய கட்டுரைகள் இவ்வாரம் ஐரோப்பிய பத்திரிகைகளில் பரவலாக வெளியாகியிருக்கின்றன.
குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவையாக தெரியவில்லை. பிரான்ஸ், நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் விளையாடிய கறுப்புப் பணம் பற்றி விபரமாக எழுதியிருக்கிறார்கள்.
போகிற போக்கில் சர்க்காருக்கு வந்தது கறுத்தப் பூதம் லைக்காவின் 2.0 க்கு வெள்;ளைப்பூதம் வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
நிலையான ஓர் அரசு.. அதற்கு முறைப்படி வரிகட்டினால் பாதுகாப்பு என்ற கொள்கை தமிழர் வாழ்வில் அதிகாரம் பெறும்வரை இந்த அவலம் தொடரும். கொலிவூட்டுக்கு உள்ள பாதுகாப்பு தமிழுக்கு இல்லை. தமிழரும் வரி விடயத்தில் நேர்மையாக இல்லை..
அலைகள் 09.11.2018