ரியூப் தமிழ் இலங்கைப் பணியகம் ஆரம்பித்துள்ள புத்தக வெளியீட்டு சந்தை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு நாவலர் வீதியில் உள்ள ரியூப் தமிழ் காரியாலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அத்தருணம் முதலாவது பிரதியை யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக நிலைய அதிபர் பெற்றுக் கொண்டு அறிவுப் பயணத்தை சம்பிரதாயபூர்வமாக தொடங்கி வைத்தார்.
ரியூப் தமிழ் சார்பில் ஆர்.ஜே.சிவா நூலை வழங்க ரியூப் தமிழ் புத்தக விற்பனை சந்தை தனது காரங்களை விரித்தது. அதைத் தொடர்ந்து கவிஞர் பாரதி மைந்தன் உட்பட பலர் நூலை வாங்கி ஒரு சினிமா படம் போல கிளாப் அடித்து விற்பனையை தொடங்கினர்.
பல நிறுவனங்கள் இந்த நூலை வாங்கி இலங்கையில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்க ஆரம்பித்துள்ளன.
இது தமிழில் ஏற்பட்டுள்ள ஒரு மறுமலர்ச்சி..!
அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் திரு. ரஞ்சித் றொட்றிக்கோ இந்த நூல் பற்றிக் கூறும்போது, சிங்களத்திலேயே இது போன்ற நல்ல நூல்கள் இல்லை. இது காலத்தின் தேவை என்று சுட்டிக்காட்டினார்.
இன்று நமது நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சனை என்ன..?
நமது கல்வியும் நமது அரசியலும், நமது சமுதாய வாழ்வும் அங்குள்ள மனிதர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க தவறிவிட்டன. அந்த இடைவெளியை இது போன்ற உலகப் புகழ் பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை விளக்கும் நூல்களாலேயே நிரவல் செய்ய முடியும்.
இலங்கை தீவுக்குள் வாழும் வாழ்வு பொருளாதார முன்னேற்றங்களை அறுவடை செய்யத்தவறி வெளிநாடுகளில் தங்கி வாழும் அவல நிலை வரவிடாது தடுக்கவும் இது போன்ற தன்னம்பிக்கை நூல்கள் அவசியமாகிறது.
ஏழையாக சேரியில் பிறந்த மரடோனா கட்டையாக இருந்தாலும் எப்படி கோயில்கட்டி வழிபடுமளவுக்கு உயர்ந்து சென்றான் என்பதை நமது இளைஞர்களுக்கு இந்த நூல் காட்டுகிறது.
இன்று வழிகாட்ட ஆளில்லாமல் இளைஞர்கள் நம்பிக்கை வரட்சியடைந்து தற்கொலை செய்கிறார்கள். இவர்கள் கையில் இது போன்ற ஒரு புத்தகம் இருந்திருந்தால் எத்தனையோ மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
பிறவிக்குறைபாட்டுடன் குள்ளனாக பிறந்த லியோனல் மெஸி எப்படி ஐந்து தடவைகள் உலகத்தில் ஒரேயொருவருக்கும் மட்டுமே வழங்கப்படும் தங்கப்பந்தை வென்றான் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
மைதானத்தில் ஜென்டில்மேனாக இருந்து நேர்மையால் தங்கப்பந்தை வென்ற இத்தாலிய வீரன் பயாலோ மெல்டினியை படிக்க வேண்டும் இன்று போதையால் பாதை மாறும் இளைஞர்கள்.
மற்றவர்களால் குட்டையான ஒருவனாக கேலி செய்யப்பட்ட டென்மார்க் வீரன் அலன் சிமொன்சன் தன் நாட்டை விட்டு ஜேர்மனி சென்று உலகப்பந்தை வென்று எப்படி தாயகம் திரும்பிக்காட்டினான் என்பதை இளைஞர்கள் படிக்க வேண்டும்.
இலங்கை தீவை நம்பி இனியும் நாம் வாழ வேண்டிய தேவை இல்லை உலகத்தை நாம் தன்னம்பிக்கை அறிவால் வெற்றி கொள்ள வழி இருப்பதை பத்து வீரர்களின் வாழ்க்கையை ஆதாரமாக காட்டி விளக்குகிறது.
இலங்கையின் பாடப்புத்தகங்கள் இன்னமும் சேர் ஐசாக் நியூட்டனின் தலையில் விழுந்த அப்பிள்பழ கதையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதாக தெரியவில்லை.
அங்குள்ள இலவச பாடப்புத்தகங்கள் தன்னம்பிக்கையை ஊட்டும் நோக்கம் கொண்டிருந்தால் அந்த நாடு இப்படியொரு அழிவை சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவேதான் நமது அறிஞர்கள் வீணே பழம் பெருமைகள் பேசாது, இதுபோல ஒரு தன்னம்பிக்கை நூலை பிள்ளைகளின் கைகளில் கொடுக்க வேண்டும்.
இலங்கை என்ற நாட்டையோ அங்குள்ள புரிதேய்ந்த அரசியலையோ நம்பியிருக்காமல் உலக மன்றில் சிறகடிக்க வேண்டுமா.. அதற்கான சர்வதேச உதைபந்தாட்ட பாடசாலைகள் பற்றிய செய்திகளை இந்த நூல் தருகிறது.
ஏழைகள் முன்னேறக்கூடாது, சமுதாயம் இப்படியே குருடாட்டம் இருப்பதே நாம் வண்டியோட்ட வசதியென ஆளவந்தார்களால் திரை போட்டு மூடப்பட்ட கால கால பெரும் இருட் திரையை கிழிக்க வேண்டும். ஏழைகள் எழுச்சி பெற முதலில் தன்னம்பிக்கை மலர வேண்டும். அதற்கான முதல் முயற்சி இந்த நூல்.
வாழ்வை வெற்றியாக்க யாரும் அறிந்திராத புதிய புதிய வழிகள் காட்டப்பட வேண்டும் என்ற செய்திகளை ஒவ்வொரு பக்கமும் வரிக்கு வரி அள்ளி வழங்கும் இந்த நூலை விற்பனை சந்தைக்கு கொண்டுவருவதே உண்மையில் ஒரு சிந்தனை புரட்சிதான்.
ஒவ்வொரு ஊர் மக்களும், கழகங்களும், பாடசாலைகளும் விழிப்படைய வேண்டுமானால் ஊர்கள் தோறும் இந்தப் புத்தகம் உலாப் போக வேண்டும். ரியூப் தமிழ் ஆரம்பித்துள்ளது. இனி மக்களே வேண்ட வேண்டிய கடமையை செய்ய வேண்டும். வாசிப்பு ஆரம்பிக்க வேண்டும்.
பயணம் தொடங்கிவிட்டது.
புலம் பெயர் தமிழர் உணவும் உடையும் கொடுத்து உடல் வளர்க்கும் திட்டங்களை செய்வது நல்லது ஆனால் அறிவை வளர்க்கும் இது போன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டியதுதான் இனியுள்ள பணியாகும்.
மீனை கொடுத்து மக்களை சேம்பேறிகளாக்கியது போதும்..
தூண்டிலை கொடுங்கள் என்பது பழமொழி.
அலைகள் 21.11.2018 புதன்