இங்கிலாந்தில் இருக்கும் வீரத்தமிழர் முன்னணியினர் தாயக மக்களுக்காக ஆற்றிவரும் பெரும் தொண்டானது கடந்த சில தினங்களாக தமிழ் மக்களின் கவனத்தை வெகுவாகத் தொட்டுள்ளது.
இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஈகையர் குடும்பத்தவர் என்ற சிறப்புப் பெயரை வைத்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இவர்களுடைய உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுதந்திரத்திற்காக போராடி தமது இன்னுயிரைக் கொடுத்தவர்களுடைய குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கும் நிகழ்வை கடந்த சில தினங்களின் முன்னதாக மட்டக்களப்பில் வெற்றிகரமாக முன்னெடுத்தவர்கள், இன்று கிளிநொச்சியில் தமது உதவி வழங்கலை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இன்று சுமார் ஆயிரம் வரையான பெற்றோரும் பிள்ளைகளும் நிகழ்வில் பங்கேற்றார்கள்.
வாழ்வாதாரமாக அமைவதற்கான தென்னம்பிள்ளை கன்றுகள், உடைகள், பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள், உணவு வகையறாக்கள் பொதிகளாக வழங்கப்பட்டன. படிக்கும் பிள்ளைகள் வசதியற்றோருக்கு 5.000 முதல் 10.000 ரூபா வரை தேவை அறிந்து வழங்கப்படுகிறது.
அறம் செய் அறக்கட்டளை என்ற அமைப்பை இலங்கையில் அமைத்து சட்ட பூர்வமாக பதிவு செய்துள்ளனர். சென்ற ஆண்டு வடக்கு முதல்வர் தலைமையில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மிதிவண்டிகளை வழங்கியிருந்தனர் என்பது இன்னொரு சிறப்பு.
இதுபோல முழங்காவில் துயிலும் இல்லத்தை அண்டி அடுத்த கட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதுவரை சுமார் 350 குடும்பங்களுக்கு உதவிகள் போய் சேர்ந்துள்ளன.
உதவிகளின் உச்சமாக பூநகரியில் ஒரு மாலை நேர பாடசாலையையும் கட்டி வருகிறார்கள். வரும் தை மாதம் முதலாக அது செயற்பட ஆரம்பித்துவிடும். சுமார் ஏழு கிராமங்கள், நான்கு பாடசாலைகளை இணைத்ததாக இந்த பாடசாலை கட்டப்படுகிறது. சுமார் 200 பிள்ளைகள் வரை உள்வாங்கக் கூடியதாக கட்டிடத்தின் கொள்ளளவு இருக்கிறது. இப்போது சுமார் 95 பிள்ளைகள் படிக்கிறார்கள்.
இங்கிலாந்தில் 2008ம் ஆண்டு வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் பல அரிய கருத்துக்களை அடிப்படையாக வைத்து இவர்களுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆரியம், திராவிடம் போன்றவற்றில் இருந்து தமிழை மீட்டல், தமிழில் பேசுதல், கையொப்பமிடல், தமிழ் கலைகளை மீண்டெழச் செய்தல் என்று பரந்துபட்ட அடிப்படையில் செயல்புரிகிறார்கள்.
சேர்க்கும் பணத்தை சேதாரமின்றி செப்பமாக தாயம் செல்ல வைப்பது இவர்களுடைய முத்திரை சிறப்பாகும். தாயகத்திற்கான உதவிகள் சேதாரமின்றி போய் சேர்வது பணிகளில் எல்லாம் கடினமான பணியாகும். அதை சிறப்பாக செய்வது வீரத் தமிழர் முன்னணியின் ஆற்றல் என்றே கூற வேண்டும். இதுவரை இரண்டு கோடி ரூபா வரை அனுப்பியிருக்கிறார்கள். உதவி செய்வது முக்கியம், அதைவிட முக்கியம் அது சரியானவரை சென்றடைவது. மேலும் ஒருவரே பல தடவைகள் உதவி பெற, வேறு சிலர் எதுவும் பெறாமலிருக்கும் நிலையும் அங்கிருக்கிறது. அதையும் தமது இடையறாத முயற்:சியால் தவிர்த்து சரியான இலக்கை சென்றடைகிறார்கள். நன்கு ஆராய்ந்து சரியானவரை இனம் கண்டு உதவிகளை நெறிப்படுத்தும் பணிகளை தாய் மண்ணில் இருந்து இவர்களின் அறம் செய் அறக்கட்டளை அமைப்பு செய்கிறது.
நாம் ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்றால் மலைபோல பெரும் பணம் வேண்டுமென்று கருதிவிடக்கூடாது. சிறிய தொகையாயினும் நன்கு திட்டமிட்டு செயற்பட்டால் அதனால் பெரிய பயனை உருவாக்கிவிடலாம்.
அதற்கு உதாரணமாக மிகவும் குறைந்தளவிலான மக்களை இணைத்து பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்கள் ஆற்றலுக்கு இந்த உதவி வழங்கும் நிகழ்வுகளே உதாரணமாகம்.
இங்கிலாந்தில் பொது வெளியில் முதல் முதலாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியவர்கள். அடுத்த ஆண்டு மறுபடியும் சிறப்பாக செய்ய இருக்கிறார்கள். அத்தோடு தாயகக்காற்று என்ற புகழ் பெற்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள்.
வீரத்தமிழர் முன்னணி என்பது மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த அமைப்பு, அரசியல் சாயம் பூசிக்கொள்ளாது, இன்று மக்களுக்கு என்ன வேண்டுமென அறிந்து, காலத்தின் தேவையை உணர்ந்து பணியாற்றுகிறார்கள்.
இவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள மூன்று பெரு நிகழ்வுகளுக்கும் ரியூப் தமிழ் ஊடக அனுசரணை வழங்கி சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
அலைகள் 22.11.2018 வியாழன் மாலை