நாம் பயணம் செய்வது வெறும் பொழுது போக்காக மட்டுமே இருக்க முடியும் என்று இதுவரை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். ஆம் பயணங்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது என்கின்றன ஆய்வுகள்.
நீங்கள் புதிதாக ஓர் இடத்துக்கு செல்கிறீர்கள், அங்குள்ள நிலப்பரப்பை புகைப்படம் எடுக்கிறீர்கள் அல்லது அந்த சுத்தமான காற்றை சுவாசிக்கிறீர்கள் என்றால் அது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் பெரும் பயனை அளிக்கும்.
இதோ பயணங்களால் நாம் பெறக்கூடிய ஆறு நன்மைகள் :
1.நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்
நீங்கள் புதிதாக ஒரு நகரத்தையோ அல்லது இயற்கை சார்ந்த இடத்தையோ அறிய விரும்புபவர் எனில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 அடிகள் நீங்கள் நடப்பீர்கள். அது அநேகமாக சுமார் 6.5 கி.மீ. இருக்கலாம். அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
அவ்வாறு நடப்பதை நீங்கள், வேடிக்கையையோ அல்லது இயற்கையை ரசித்துக் கொண்டோ செய்தால் நீங்கள் உங்கள் உடல்நலத்துக்கும், இதயத்துக்கும் பெரும் நன்மையை தேடிக் கொள்கிறீர்கள்.
இதயம் மற்றும் அது தொடர்பான நோய்கள் குறித்து 1948ஆம் ஆண்டிலிருந்து ஆய்வு நடத்திவரும் `தி ஃப்ரேமிங்காம்`, இதுகுறித்து சில பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. பின் அப்பெண்கள் 20 வருடம் கழித்தும் கண்காணிக்கப்பட்டனர்.
ஒரு வருடத்தில் இரண்டு முறை விடுமுறைக்கு செல்லும் பெண்களை காட்டிலும், ஆறு வருடங்களில் ஒரே ஒருமுறை விடுமுறைக்காக சென்ற பெண்களுக்கு அதிகப்படியான இதய நோய், மாரடைப்பு வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம் கடந்த ஒன்பது வருடங்களாக இதயநோய் உள்ள 12,000 ஆண்களை கண்காணித்தது.
ஆண்டு விடுமுறைக்கு செல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 32 சதவீதம் உள்ளது என்று அதில் தெரியவந்துள்ளது.
2.நீங்கள் புத்துணர்வாக உணர்வீர்கள்
`க்ளோபல் கொலிஷன் ஆன் ஏஜிங் ரிபோட்` படி அதிக மன அழுத்தம் உடையவர்கள் சீக்கிரமாக வயதான தோற்றத்தை பெறக்கூடும் என்று தெரிய வருகிறது.
அது கோர்டிசல் ஹார்மோனை உங்கள் உடலில் நீங்கள் செலுத்துவதற்கு சமம். கோர்டிசல் ஹார்மோன் என்பது நம் உடலின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது.
அது நமது நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவிழக்கச்செய்யும், மேலும் தலைவலி, உடல் சோர்வு, தசைத் தளர்வு, பெருங்குடல் பாதிப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த மன அழுத்தத்தைப் போக்க இரண்டு, மூன்று நாள் பயணங்கள் போதுமானதாக உள்ளது.
பிரிட்டனின் சர்ரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், ஒரு பயணத்துக்காக திட்டமிடுவதும், அதற்காக எதிர்பார்ப்பதும் நம்முள் ஒரு நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும். மேலும், விடுமுறைக்கு செல்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர் என்று கண்டறிந்தனர்.
3.உங்கள் புத்தியை கூர்மையாக்கும்
பயணம் என்பது நமது மூளை திறனை தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். புதிய உணவுகள், சிறந்த சூழல், மற்றும் பலவிதமான மொழிகள் என அனைத்தும் நமது மூளை சிறப்பாக செயல்பட அது உதவும்.
உள்ளூர் கலாசாரம் மற்றும் புதிய இடங்கள் குறித்து அறிந்து கொள்வது நமது புத்தியை கூர்மையாக்குவது மட்டுமல்ல, மூளையை பாதிக்கும் அல்சைமர் போன்ற வியாதிகளை தடுக்கும் என்று க்ளோபல் கொலிஷன் ஆன் ஏஜிங் அறிக்கை கூறுகிறது.
பயணம் ஒரு நன்மருந்து என பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் பல்கலையை சேர்ந்த பால் டி நசம்பம் தெரிவிக்கிறார்.
பயணம் நமது மூளைக்கு சவால் விடும்; மேலும் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவங்களும், சூழல்களும், நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் கடினகாலத்தில் உங்கள் மூளை துரிதமாக செயல்பட அது உதவும்.
4.உங்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்
நீங்கள் ஒரு புதிய யோசனையை பெற வேண்டும் என்றால் அதைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் விளம்பரத்துறையில் பணியாற்றும் ஜேம்ஸ் வெப் யங் கூறுகிறார். இதைதான் அவர் தனது `ஏ டெக்னிக் ஃபார் ப்ரோடியூச் ஐடியாஸ்` என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வகுப்புகளுக்கான யோசனைகள் வானத்திலிருந்து சட்டென்று வருவதில்லை என்கிறார்.
தனது வகுப்புக்கான பாடம் குறித்து ஆரம்பத்தில் யோசித்தாலும் அதற்கான புதியதொரு யோசனை வேறு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் தனக்கு உதயமாகிறது என்கிறார் அவர். படங்கள் பார்ப்பது போன்ற நிகழ்வுகளில் மூழ்கியிருக்கும்போது பல சமயங்களில் தனக்கு புதிய யோசனைகள் வந்ததாக அவர் கூறுகிறார்.
இன்றைய நரம்பியல் விஞ்ஞானிகள், புதிய சூழல்கள் நமது மூளையை புத்துணர்வாக உணரச் செய்யும் என்கிறார்கள்.
மேலும் இது நமது மூளையை புதிய யோசனைகளை தூண்டச் செய்வதோடு நேரடி தொடர்புடையது என்கிறார்கள்.
5.உங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கும்
நீண்டகால மன அழுத்தம் என்பது பணியிடத்தில் தொற்றுநோய் போன்றது.
இது பணியாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்
மன அழுத்தத்தால் பணியாளர்கள் நோய்வாய்படுவது, விபத்துக்கள் நேர்வது அதிக விடுமுறைகள் எடுப்பது என நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக இருக்கும்
மன அழுத்தம் அமெரிக்காவுக்கு 300பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுவத்துவதாக அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்ட்ரஸ் தெரிவிக்கின்றது.
எனவே நமது மூளைக்கு தினசரி பணியிலிருந்து ஓய்வு கொடுப்பது அவசியம் என்கிறார் நியூரோ சயின்ஸ் ஆஃப் ஹேப்பினெஸ் மற்றும் ஆப்டிமல் ஹெல்த்தின் ஆசிரியர் ஷிமி காங்.
அவ்வாறு செய்தால் பிரச்சனை தீர்க்கும் திறனையையும், புதிய யோசனைகளையும் நமது மூளையில் உருவாகும் என்கிறார் அவர்.
6.ஆளுமையை மேம்படுத்தும்
நீங்கள் இளம் வயதினர், உங்களுக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு வருகிறது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால் அது உங்கள் ஆளுமையை மேம்படுத்த பெரிதும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெர்மனியில் ஃப்ரீட்ரிக் ஸ்கில்லர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், வெளிநாடுகளுக்கு சென்ற மூவாயிரம் மாணவர்களை வெளிநாடுகளுக்கு செல்லாத மாணவர்களோடு ஒப்பிட்டனர்.
வெளிநாடுகளுக்கு சென்று பயின்ற மாணவர்கள் வெளி நபர்களுடன் அதிகம் பழகுபவர்களாக உள்ளனர் என அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவுடன், புதிய அனுபவங்களை வரவேற்பவர்களாக இருந்தனர். மேலும் அதிகம் உணர்ச்சிவசப்படாதவர்களாகவும் இருந்தனர்.
எனவே நீங்கள் எந்த வயதை உடையவராக இருந்தாலும் உங்களுடையை பயணங்கள் எதுவாயினும் அதன் மூலம் உங்களுக்கு பெரும் பயன்களே கிடைக்கின்றன.