பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் தவறாகத் தரப்பட்டன, ரிசர்வ் வங்கியின் சுயாட்சி கேள்விக்குறியானது, பணமதிப்பிழப்பு மிகப்பெரிய வங்கி ஊழல் என்று தனது புதிய நூலில் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா
பாஜகவின் மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா, பாஜகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டபின், தனது 2 ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்த யஷ்வந்த் சின்ஹா மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா “ இந்தியா அன்மேட்: ஹவ் தி மோடி கவர்மென்ட் புரோக் தி இகானமி?” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
அதில் மோடியின் கடந்த 4 ஆண்டுகால அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம்:
தான் எப்போதும் மோடியைப் பற்றி விமர்சித்து வருபவன் அல்ல. மோடியின் தவறான பொருளாதார கொள்கைகள் ஏற்பட்ட விளைவுகளைத்தான் அவ்வப்போது நான் கூறி வருகிறேன்.
. எனக்கு எந்தவிதத்திலும் மோடி மீது தனிப்பட்ட கோபம் இல்லை. என்னை அவர் அமைச்சர் பதவியில் அமரவைக்கவில்லை என்பதற்காகவும் விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான்தான் 2014-ம் ஆண்டு தேர்தல் வந்தபோது, பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தலாம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தேன். ஆதலால் மோடிக்குத் தனிப்பட்ட முறையில் எதிரானவன் இல்லை.
மோடியின் பொருளாதார கொள்கைகளான பணமதிப்பிழப்பு, வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி, மேக் இன் இந்தியா உள்ளிட்ட பொருளாதார கொள்கைகள், திட்டங்கள் குறித்துத்தான் விமர்சிக்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்தை மிகஉயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்வதற்குக் கிடைத்த வாய்ப்பை பிரதமர் மோடி தவறவிட்டுவிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டது, ஊழல்வாதிகளைப் பணக்காரர்களாகிவிட்டது. பணமதிப்பிழப்பு முடிவை சாதகமாகக் காட்டி உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றியும் பெற்றது பாஜக. ஆனால், பணமதிப்பிழப்பின் நோக்கத்தையும், முடிவையும் பார்த்தால் அது பூஜ்யமாக இருந்தது.
பிரதமர் மோடி ஏற்படுத்திய ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகப்பெரியத் தோல்வியாகும். கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய உற்பத்தி போட்டித்திறன் கவுன்சில் என்று உருவாக்கியது. அதை தூசுதட்டி புதிய பெயர்தான் மேக்இன் . அந்த கவுன்சிலுக்கு தலைவராக வி.கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அந்த கவுன்சில் பாஜகவின் உண்மையான சிந்தனையில் உருவானது அல்ல.
மோடி கூறிய வேலைவாய்ப்புக் அனைத்தும் பக்கோடா விற்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், டீ விற்பவர்கள், செய்தித்தாள் விற்பவர்கள் ஆகியோர் பற்றித்தான் குறிப்பிட்டு வேலைசெய்யலாம் என்றார், ஆனால், படித்த முடித்த இளைஞர்களுக்கான கனவு வேலையைக் குறிப்பிடவில்லை.
இந்தியாவின் ஜிடிபி புள்ளிவிவரங்கள் இந்தியாவின் தகுதிக்கு குறைவாக இருக்கிறது உலகிலேயே இந்தியாதான் பொருளாதார வளர்ச்சியில் 7.35 சதவீதம் எந்தவிதமான முதலீடும், தொழில்துறை வளர்ச்சியும், வேளாண்வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்திருக்கிறது. இது மாயஜாலம்தான்.
ஜிஎஸ்டி வரி என்பது சிறப்பான திட்டம் தான். பெரும்பாலான பொருட்களின் விலை குறைய இந்த வரி உதவியாக இருக்கும். இந்த வரி நடைமுறைக்குவந்தால், வரி மீது வரிவிதிப்பது இருக்காது. ஆனால், மோடியும், ஜேட்லியும் தொடக்கத்திலிருந்து நடைமுறைப்படுத்தியவிதம் சரியல்ல. இதுவரை 400 வகையான அறிவிக்கைகளும், 100 சுற்றறிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
என்னைப்பொருத்தவரை மோடி அரசு என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்தான் (Event Manager) தவறான எண்ணங்களைச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். இவ்வாறு அந்த புத்தகத்தில் சின்ஹா தெரிவித்துள்ளார்.