தற்போது இங்கிலாந்தில் வாழ்பவரும் முன்னர் ஜேர்மனியில் வாழ்ந்தவருமான புலம் பெயர் பெண் எழுத்தாளர் தீபதிலகையின் ( திருமதி. கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள் )மகிழம்பூவும் அறுகம்புல்லும் என்ற நூல் வரும் ஞாயிறு மாலை 15.00 மணிக்கு பரடைசியா நகரில் உள்ள அலே பாடசாலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த வெளியீட்டை தற்போது டென்மார்க்கில் புதிதாக ஆரம்பித்திருக்கும் நிலாமுற்றம் என்ற கவிஞர்கள் குழு கொண்ட அமைப்பு நடத்துகிறது. இது இவர்களுடைய கன்னி முயற்சியாகும்.
தாயகத்தில் தீவகத்தை பிறப்பிடமாகக் கொண்ட தீபதிலகை தான் வாழ்ந்த பகுதிகளை பின்னணியாக கொண்டு அரசியல் சமூகம், வரலாறு கொண்ட புதுவிதமான தோற்றப்பாடு கொண்ட நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
தமிழகம் உட்பட பல நாடுகளிலும் இதன் வெளியீடுகள் நடைபெற்று பாராட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் டென்மார்க்கிலும் நடை பெறுகிறது. இந்த நிகழ்வுக்கு சுவிற்சலாந்து நாட்டில் இருந்து வருகைதரும் கங்கைமகன் தலைமைதாங்குகிறார்.
டென்மார்க்கின் எழுத்தாளர்கள் அ. ஜீவகுமாரன், ஜஸ்டின் கெனடி, கி.செ.துரை உட்பட பலர் பேசுகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பின்னதாக ஓர் இனிய இலக்கிய நிகழ்வாக இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமல்ல, செழிப்பான ஒரு சமுதாயம் துளிர்த்து வளர வேண்டுமென நினைத்தால் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியது அவசியம்.
வீணான வரட்டுத்தனப் போக்குகளால் சமுதாயத்தை இருட்பாதைக்கு கொண்டு சென்றது போதும் இனியாவது ஜீவனுள்ள முயற்சிகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற சமுதாய புரட்சி தமிழ் மக்களிடையே மலரும் காலத்தில் இது நடைபெறுகிறது.
வாரம் ஒரு தடவை நூல் வெளியீடு, இலக்கிய நிகழ்வென்று செழித்துக்கிடந்த ஒரு நாடு இன்று எதுவும் இன்றி கிடக்கிறது. கடந்த காலத்தை பேசுவதில் பயன் இல்லை..
இவைகள் மறுமலர்ச்சி என்றாலும் பாராட்டப்படவும், பங்கேற்கவும் உரிய நிகழ்வுகளாகும்.
இயந்திர வாழ்வால் அழிந்தும், அழிக்கப்பட்டும், தவறுகளை தொலைக்காட்சிகளை பார்த்து சரியென மயங்கிக் கொண்டிருக்கும் டென்மார்க்கின் தமிழ் கலைகளை மீட்போம்..
அலைகள் 23.01.2019