டென்மார்க் பரடைசியா நகரில் நிலாமுற்றம் என்ற கவிஞர்களின் கவியரங்க நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 27.01.2019 ) மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
நிலா முற்றம் என்ற அமைப்பானது டென்மார்க்கில் முதன் முறையாக தனது கவியரங்கை நிகழ்த்துகிறது என்று கருதி போயிருந்தோம். நிலா முற்றம் என்ற பெயரை வேறும் எங்கோ கேட்டிருக்கிறோமே அது வேறு இது வேறா என்று எண்ணியபடியே அரங்கிற்குள் நுழைந்தபோது அங்கு காண்பிக்கப்பட்ட காணொளி அனைத்து கேள்விகளுக்கும் விடைதந்தது.
தமிழகத்தில் இருந்து கவிஞர்கள், நிலாமுற்றம் அமைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கியதும், புலம் பெயர் நாடுகளில் இருந்து பல கவிஞர்கள் வாழ்த்து செய்திகளை பதிவாக்கியதும் அங்கு காணொளி மூலம் பார்த்தும் கேட்டும் உணரக் கூடியதாக இருந்தது.
ஆக நிலா முற்றம் என்பது தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெளிநாடுகளுக்கு பரவலாக்கம் பெறும் ஓர் கவிதை ஆர்வலர் அமைப்பு என்பதை அந்த காணொளி பதிவுகள் தந்தன.
கவிதைகளை படிப்பது, சுவைப்பது ஒரு தனியின்பம், ஈழத்தில் நடைபெற்ற போராட்டம் பெற்ற மிகப் பெரிய இலக்கிய வடிவம் கவிதை என்று பேராசிரியர் கா. சிவத்தம்பி அடிக்கடி கூறுவார்.
அந்த நேரத்து உணர்வுகளை ஆற அமர இருந்து நாவல் போன்ற படைப்புக்களாக்க போர் காரணமாக முடியாத காரணத்தால் கவிதைதான் களத்தில் இலகுவானதாக இருந்தது என்றும் தனது தரப்பு நியாயங்களை அவர் கூறி வந்தார்.
அவரை அடியொற்றி மற்றவர்களும் அதையே கிளிப்பிள்ளைகள் போல கூறி வந்தாலும் இன்று தமிழர்களில் கவிஞர்களின் தொகை அதைவிட அதிகம் என்று கூறலாம், காரணம் முகநூல்.
இப்போது கா. சிவத்தம்பி இருந்திருந்தால் முகநூலும் தமிழ் கவிதைகளின் புதுப் பரிணாமமும் என்று ஓர் ஆய்வை நடத்தியிருப்பார்.. அப்படி கவிதைகள் கொட்டுகின்றன.
மரபுக்கவிதை போய், புதுக்கவிதை வந்து இப்போது முகநூல் கவிதைக்காலம் என்று கவிதை புதிய பரிமாணம் எடுத்துவிட்டதை சொல்லி, மற்றக்கிளிகளையும் அதையே ஊத வைக்க நம் கா.சிவத்தம்பி, கைலாசபதி இருவரும் இல்லாது போயினரே என்பது ஒரு குறை.
தமிழ் அழிந்துவிடும், அட போ தொலைந்துவிடும், வெளிநாடு போனதால் கதை முடிந்தது காடு, மலை, தவிடு பொடி என்று நம்மாள் முழங்கினாலும் தமிழை பேச முடியாத இளையோர் கூட வேற்று மொழி வரிகளில் கவிதை எழுதுவதை சர்வசாதாரணமாக காண முடிகிறது.
காலம் தமிழுக்கு வாய்ப்பாகத்தான் நடக்கிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது கவிதை பிறக்க மொழி தடையில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது, காரணம் முகநூல் கவிதைகள்.
வேற்று மொழியில் தமிழை எழுதி வரும் பாடல்கள், கூகுள் றோபோ மூலம் தமிழை பேச வரும் உரை நடை கவிதைகள் என்று தமிழ் சமூக வலைத்தள தமிழாகியிருக்கிறது.
கவிதை என்பது வைரத்தின் வாள் போன்றது. ஒரு சொல் கூட ஒலிக்காக தேவையற்று அங்கே இடம் பெறக்கூடாது என்ற பாரதிதாசன் காலம் என்று ஒன்று இருந்திருக்கிறது என்ற செய்தி சென்று சேராத மார்க் சுக்கர்பேர்க் கால கவிதைகள் பிரவாகிக்கின்றன.
இந்த பெரு வெள்ளத்தில் சற்று வித்தியாசமாக இருக்கிறது நிலா முற்றம் என்ற அமைப்பு.
நிலாமுற்றம் கவியரங்கத்திற்கு டென்மார்க்கில் வாழ்ந்துவரும் மரபு கவிதை வல்லாளர் பைந்தமிழ் செல்வன் வ.க.பரந்தாமன் அவர்கள் தலைமைதாங்கினார்.
டென்மார்க்கின் முன்னணி கவிஞர்கள் பலர் பங்கேற்று தமது கவிதைகளை படித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கவிஞர் இணுவையூர் சக்திதாசனில் இருந்து கோவைக்கவி வேதா இலங்காதிலகம், கவிஞர் சுவிற்சலாந்து கங்கைமகன், டென்மார்க் நக்கீரன்மகள், நிலா முற்றம் தலைவர் சோதி செல்லத்துரை, கவிதாயினிகள் ரதிமோகன், ஒலிபரப்பாளர் சுபாஷினி, படைப்பாளி கலாநிதி ஜீவகுமாரன், ஆகியோர் கவிதைகளை படித்தார்கள்.
வழிமாறிய பயணங்கள் என்பது கவியரங்கத்திற்கான தலைப்பாக இருந்தது. புலம் பெயர் வாழ்வில் எங்கெங்கு தவறுவிட்டோம் என்பதை கவிஞர்கள் தத்தமது பார்வையில் சுட்டிக்காட்டியபோது அவை அதை ரசித்தது ஒரு வித்தியாசம்.
பொதுவாக கவியரங்கம் நடைபெறும்போது மக்களிடையே சலசலப்பு கிளம்புவதுண்டு ஆனால் மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்கள் கவிஞர்கள்.
நடனம், கரோக்கி பாடல்கள், சினிமா பாடல் நடனம் என்று இவைகளை வைத்தால்தான் சனம் வரும் என்ற முடிவை உடைத்து தகர்த்து அரங்கு நிறைய மக்களை கூட்டி இப்படியொரு நிகழ்வை நடத்தியது துணிச்சலே.
சீட்டு, வட்டி, ஏமாற்று, முகநூல், நேரமின்மை போன்ற பல்வேறு சமுதாய சீரழிவுகளையும் சொல்லி புலம் பெயர் வாழ்வு முதல் தாயக வாழ்வுவரை திசைமாறிய பறவைகளாக போகும் வாழ்வை கவிஞர்கள் தத்தமது அனுபவங்களுக்கு ஏற்ப பதிவு செய்தார்கள்.
ஒவ்வொரு கவிஞராக எழுதிவிட துடிக்கிறது மனது ஆனால் எல்லோரும் சொன்ன விடயம் முழுவதையும் கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் புலம் பெயர் வாழ்வு என்ற கப்பல் தனது திசையில் பாதை தவறியிருக்கிறது என்ற எச்சரிக்கை குரல்களாகவே அனைத்து குரல்களும் இருந்தன.
கப்பல் தனது திசையில்தான் போகிறது ஆனால் அதற்கு தெரியாமலே கீழே துள்ளும் அலை அதை தலைமாற்றி எற்றி வைத்துவிடுகிறது போல வாழ்வு தூக்கி வைக்கப்பட்டுவிட்டது என்பது இவர்கள் கருத்தாக இருந்தது.
கவிஞர்களின் அழகிய பதிவுகள் வேறு வேறாயினும் அதன் ஜீவன் ஒன்றாகவே இருந்தது. சமுதாயத்தை மேன்மைப்படுத்த சைவநீதி உதவும் என்று ஒரு பழைய பாடல் கூறுகிறது. அதை நம்மாள் மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்று பாடுவான். அதுபோல மேன்மை கொள் சமுதாயத்தை செதுக்கும் சிற்பிகளாக இந்த கவிஞர்கள் அரங்கில் தரிசனமானது மகிழ்வு தந்தது.
இதுபோல கவிதை நிகழ்வுகளை தலைவர் சோதிராசா செல்லத்துரை தலமையிலான கவிஞர் பெருமக்கள் தொடர்ந்து தரவேண்டும்.
கவியரங்கம் நிறைவடைய பின்னிணைப்பாக கவிஞர் நல்லை ஆனந்தனும் கவிதை ஒன்றை அழகுபட வாசித்தளித்தார்.
மண்டபம் குளிராக இருந்தாலும் சூடான தேநீர், சுவையான சிற்றுண்டி, பங்கேற்றவருக்கு பரிசு பொன்னாடை, பார்வையாளருக்கு இலவச அனுமதி என்று இப்படியொரு நிகழ்வை நிலா முற்றத்தை தவிர வேறு யாரால் நடத்த முடியும்.
அலைகள் 28.01.2019 திங்கள்