ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாங்கள் எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. அரசியலமைப்பு விடயத்தில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கின்ற போது இப்போது நடப்பது சாதியமில்லை என ஜனாதிபதி சொல்வதை வைத்து இதனைக் கைவிட நாங்கள் தயாராக இல்லை. ஜனாதிபதி முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வாகரையில் நேற்று (02) மாலை இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு அறிக்கை வெளிவந்த போது தெற்கிலே உள்ள பேரினவாதிகள் இந்த நாட்டை பிரிக்கப் போகின்றது என்று கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எம்மவர்கள் மத்தியில் இருக்கின்ற சிலர் இதில் எதுவும் கிடையாது என்று சொல்லுகின்றார்கள். ஜனாதிபதியோ தேவையில்லாமல் இந்த நேரத்திலே அரசியலமைப்புக் கதைகளைப் பேசி தெற்கிலும் வடக்கிலும் பிழையான கதைகளைக் கூறி குழப்பம் விளைவிக்க வேண்டாம் இது இப்போதைக்குச் சாத்தியமற்றது என்று சொல்லுகின்றார். எப்படி இருந்தவர் எப்படியாக இன்று பேசுகின்றார். அதோடு சேர்த்து நாட்டில் நிலையான ஆட்சி இருக்கும் போதுதான் அரசியலமைப்பைக் கொண்டு வரலாம் என்ற ஒரு கருத்தையும் சொல்லியிருக்கின்றார்.
இந்த நாட்டிலே சிறிய கட்சிகள் தங்களுடைய பெறுமதிக்கு மேலாக செல்வாக்கைப் பயன்படுத்துகின்ற போது அது ஒரு நிலையான ஆட்சி இல்லை என்று சொல்லுகின்றார். எண்ணிக்கையிலே சிறுபான்மையினத்தவர் தங்கள் வாக்கினால் தங்கள் செல்வாக்கினால் ஆட்சியை நிர்ணயிக்கின்ற போது யார் ஆட்சி செய்வார்கள் என்று அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற போது இதனைச் செய்ய முடியாது என்றே சொல்லுகின்றார்.
ஜனாதிபதி மிகப் பெரிய உண்மையொன்றை மறந்துவிட்டார் போலத் தெரிகின்றது. அவர் தேர்தலிலே வெற்றி பெற்ற போது தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர்கள் யார்? இந்த நாட்டிலே பெரும்பான்மை இனமாக இருந்தவர்கள் தானா அவரைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்கள் இல்லை. இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்கள் தமிழ், முஸ்லீம் மக்கள் எண்ணிக்கையிலே சிறுபான்மையினராக இருக்கின்ற நாங்கள் தான் தீர்மானிக்கின்ற சக்தியாக அவரை அரியாசனம் ஏற்றினோம். அதை மறந்தவராக இப்படியான சூழ்நிலை நாட்டுக்குக் கேடு விளைவிக்கின்ற சூழ்நிலையாக இருக்கின்றது என்று வாய் கூசாமல் சொல்லியிருக்கின்றார்.
ஜனாதிபதிக்கு மிகவும் தாழ்மையாக நாங்கள் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் அந்தத் தேர்தலிலே வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்று ஜனாதிபதி கதிரையிலே இருக்கின்றீர்கள். ஒரு தடவை மட்டும் தான் நான் ஜனாதிபதியாக இருப்பேன். இன்னுமொரு தடவை போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த நீங்கள் இன்றைக்கு இரண்டாம் தரம் ஜனாதிபதியாவதைக் கனவாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தினாலே உங்கள் போக்கு மாறியிருக்கின்றது. அதனைச் சுட்டிக் காட்டுகின்ற உரித்து எங்களிடத்திலே இருக்கின்றது.
உங்களை ஜனாதிபதியாக்குகின்ற போது எமது இனப்பிரச்சினைக்கான தீர்வை எழுத்திலே கொடுக்கத் தயாராக இருந்தீர்கள். அதற்கு நானே சாட்சி. இன்னும் பல பேர் அங்கே இருந்தோம். ஆனால் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதனை எழுத்திலே நாங்கள் கேட்கவில்லை. பின்னர் நீங்களும் அதனை ஊர்ஜிதம் செய்திருக்கின்றீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்ற வேண்டிய தார்மிகப் பொறுப்பு இன்னமும் உங்களிடம் இருக்கின்றது.
இந்த அரசலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்ட அன்று அதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்திலே 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட போது நீங்கள் ஆற்றிய உரையை மீண்டும் ஒரு முறை செவிமடுத்துப் பாருங்கள். ஏன் இந்த நாட்டுக்கு ஒரு அரசியலமைப்புத் தேவை என்பதை நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு இரத்தக் களரி ஏற்பட்டிருக்காது நானும் அந்த வேளையிலே தவறாக அதனை விமர்சித்தேன் என்று சொன்னீர்கள்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் கூட இந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று நீங்கள் அன்று சொன்னீர்கள். தெற்கில் இருக்கின்றவர்களுக்கு சமஷ்டி என்றால் பயம் ஏற்படுகிறது. வடக்கில் இருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி என்று சொன்னால் பீதி ஏற்படுகின்றது. நாட்டு மக்கள் பார்த்துப் பயப்படுகின்ற ஒரு விடயமாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கக் கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இந்தச் சொற்களையெல்லாம் விடுத்து நாங்கள் ஒரு நவீன அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னீர்களா இல்லையா? எங்கே சென்றது இந்த வாக்குறுதிகள்.
ஒரு விடயத்தை நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம். ஜனாதிபதி தன்னுடைய முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் கூட நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை. ஒக்டோபர் 26 இல் அவர் சதிப் புரட்சி வலைக்குள்ளே சிக்கி செயற்பட்ட போதும் கூட நாங்கள் அவரைச் சந்தித்து அவரது முகத்திற்கு நேரே சில உண்மைகளை மரியாதையோடு சொல்லி வைத்தோம். நீங்கள் அரசியலமைப்பை மீறியிருக்கின்றீர்கள், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது நாங்கள் உங்களை ஆதரிக்க முடியாது என்று நேரடியாகவே அவரிடம் சொன்னோம். அதனை மாற்றியமைப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து செயற்பட்டோம். நிலைமை மாற்றப்பட்டது.
ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாங்கள் எமது கொள்கையையோ முயற்சியையோ கைவிடப் போவதில்லை. நாங்கள் அதிலே திடமாக இருப்போம். இந்த நாட்டிலே ஒரு அரசியலமைப்பு எமது மக்கள் ஏற்றுக் கொள்கின்ற அரசியலமைப்பாக இருக்க வேண்டுமாக இருந்தால் புதியதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இதுவரை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட அரசியலமைப்பு இந்த நாட்டிலே கிடையாது. அது ஒரு உண்மையான சமூக ஒப்பந்தமாக இருக்க வேண்டுமாக இருந்தால். இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஆவணமாக இருக்க வேண்டும். அப்படியொரு ஆவணத்தைத் தயார் செய்வதற்கு நாங்கள் முழு மூச்சோடு, முழுமையான அர்ப்பணிப்போடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கின்ற போது இது இப்போது நடப்பது சாதியமில்லை என ஜனாதிபதி சொல்வதை வைத்து இதனைக் கைவிட நாங்கள் தயாராக இல்லை என்றார்.
வாகரை பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.