வடக்கு அபிவிருத்திக்கென பனை நிதியமொன்றை அரசாங்கம் பிரேரித்தாலும் அதற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் புலம் பெயர் தமிழரிடம் அதற்கு பணம் எதிர்பார்ப்பது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு அமைச்சிற்கு மொத்த வரவு செலவுத்திட்டத்தில் ஆறில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது யுத்த வரவு செலவுத் திட்டம் எனவும் குறிப்பிட்டார்.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
மொத்த வரவு செலவுத்திட்ட நிதியில் ஆறில் ஒருபங்கு பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தமில்லாத நிலையில் எதற்காக இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு திறந்த வெ ளிச்சிறையாக இருப்பதோடு படையினரின் நெருக்கடிக்கு மத்தியில் சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் வாழ்கின்றனர்.இது யுத்த வரவு செலவுத் திட்டமா என சந்தேகம் வருகிறது.சமாதானம் நிலவும் நிலையில் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பனை நிதியம் ஏமாற்று முயற்சியாகும் அரசாங்கம் இதற்குபணம் எதுவும் இடாமல் புலம் பெயர் சமூகத்திடமிருந்து உதவி கோருகிறது. அரசாங்கம் அடுத்த வருடம் இருக்குமா என்று தெரியாத நிலையில் இருவருடங்களில் 5 ஆயிரம் மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கில் பெருமளவு காணிகளில் படையினர் பண்ணைகள் அமைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அரசாங்கம் அதனை மறைத்து வருகிறது.வடக்கு கிழக்கில் அபிவிருத்தி மேற்கொள்ளும் திட்டங்கள் கிடையாது. கேப்பாப் புலவு காணிகளை விடுவிக்க கோரினால் கட்டிடங்களை அகற்ற பணம் இல்லை என இராணுவம் கூறுகிறது. பண்ணைகளினால் உழைக்கும் பணத்தினால் அதனை செய்ய முடியும்.
சமஷ்டி கோரினால் கம்பெரலியவில் வந்து நிற்கிறது.
காணாமல் போனவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாவழங்க பிரேரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் இறந்தும் காணமல் போயும் இருக்கிறார்கள். யார் தமிழருக்கு குற்றம் செய்தனரோ அவர்களிடமே தமிழர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஜெனீவாவில் உடன்பட்ட விடயங்கள் நத்தை வேகத்தில் தான் முன்னெடுக்கப்படுகிறது. மன்னாரில் படைமுகாம்கள் உள்ள இடங்களுக்கு அருகில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. செம்பாட்டுத் தோட்டத்தை கபளீகரம் செய்ய முயற்சி இடம்பெறுகிறது. அரசியல் தீர்வுக்கு எத்தகைய முயற்சி எடுக்கப்பட்டது.
4 வரவு செலவுத் திட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்கியிருக்கிறோம். 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கியிருக்கிறோம். எம்மால் எவ்வளவு விட்டுக் கொடுப்பு வழங்க முடியுமோ அந்தளவு விட்டுக் கொடுத்திருக்கிறோம்.இம்முறை யுத்த வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது குறித்து கவலையடைகிறோம் என்றார்.