இந்தியாவின் ‘ஏ சாட்’ ஏவுகணை தாக்கி அழித்த செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியில் மிதக்கின்றன என்றும் இவற்றால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பாதிப்பில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் நோக்கில் மற்ற செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ‘ஏ-சாட்’ ஏவுகணையை கடந்த சில நாட்களுக்கு முன் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை வெற்றிகரமாக சோதித்தது.
3 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்த பயனில்லாத செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தாக்கி அழித்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா அழித்த செயற்கைக்கோளின் பாகங்கள் விண்வெளியில் மிதப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து அமெரிக்கா தரப்பில், ”இந்தியாவின் ‘ஏ சாட்’ ஏவுகணை தாக்கி அழித்த செயற்கைக்கோளின் 270 துண்டுகள் ஆங்காங்கே சிதைந்துள்ளன. இதனை வட அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் பாதுகாப்புக் கட்டளை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணையின் பெரிய துண்டு வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் சிதைந்து விடும். மீதமுள்ள துண்டுகள் 45 நாட்களுக்குள் தானாக சிதைந்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுவட்டப் பாதை விதியின்படி, பொதுவாக செயற்கைக்கோள் பாகங்கள் பூமியை நோக்கிச் செல்லும்போது விண்வெளி மண்டலத்தில் நுழைந்த உடனேயே எரிந்துவிடும்