மோடி அரசு மீண்டும் அமையும் : பிரதமர் மோடி

முதல்கட்டத் தேர்தலில் நாடுமுழுவதும் மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்தும் அலை வீசுவதை உணர முடிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.

ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 18 மாநிலங்களில், 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றது.இந்தநிலையில், அசாம் மாநிலம் சில்சாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடந்து முடிந்துள்ளது. நாட்டில் சில பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இந்த முதல்கட்டத் தேர்தலில் மக்களின் ஆதரவை என்னால் உணர முடிகிறது. மோடி அரசு மீண்டும் அமையும் என்பதை உணர்த்து ஆதரவு அலை வீசுவதை முதல்கட்ட தேர்தல் நமக்கு உணர்த்துகின்றன. இந்த அலை தொடரும். எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அசாமில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

—————

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஸ்னைஃபர் துப்பாக்கியில் பயன்படும் லேசர் ஒளி 7 முறை பாய்ச்சப்பட்டதால் அவருக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் நேற்று ராகுல்காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, அவரின் தலை, முகம் ஆகிய பகுதியில் 7 முறை பச்சை நிறத்தில் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதாக வீடியோ காட்சிகள் வெளியாகின.

ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்திய ஆகியோர் கொல்லப்பட்ட காரணத்தால், ராகுலுக்கு சிறப்பு பிரிவு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

அமேதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகளை இணைத்து மத்திய உள்துறைக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. அதில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பாதுகாப்பில் மெத்தனமாக இருக்கும் உத்தரப்பிரதேச அரசு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கூறுகையில், ” அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 7 முறை வெவ்வேறு இடங்களில் இருந்து அவர் மீது பச்சை நிற லேசர் ஒளிபட்டது. அது எந்த ஒளி என்று வீடியோ மூலம் ஆலோசித்தபோது, ஸ்னைஃபர் துப்பாக்கியில் (தூரத்திலிருந்து லென்ஸ் மூலம் குறிபார்த்து சுடும் துப்பாக்கி) இருந்து வந்த ஒளி என அறிந்தோம். ராகுல் காந்திக்கு பாதுகாப்பை பலப்படுத்தக்கூறி உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் ” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம், எஸ்பிஜி இயக்குநரிடம் ஆலோசனை நடத்தியதில், அது ஸ்னைஃபர் துப்பாக்கியின் லேசர் ஒளி அல்ல, செல்போனின் ஒளி. ராகுலின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ” காங்கிரஸ் கட்சியின் புகைப்படக் காரர் பயன்படுத்திய கேமிராவில் இருந்து வெளியான வெளிச்சம்தான் ராகுலின் முகத்தில் பட்டுள்ளது. ஸ்னைஃபர் துப்பாக்கி லேசர்ஒளி அல்ல. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என உள்துறை அமைச்சகத்திடம் எஸ்பிஜி பிரிவினர் தெரிவித்துவிட்டனர் ” எனத் தெரிவித்தார்.

Related posts