பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கொடிகளை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேனர்களை இனி வைக்காதீர்கள் என்று தங்கள் கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்கள், கொடிகளை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் எந்த உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று உயர் நீதிமன்றம் இன்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில் அதிமுக கட்சி நிகழ்ச்சிகளிலும், தங்களது இல்ல நிகழ்வுகளிலும் பொதுமக்களுக்கு இ்டையூறு தரும்படி பேனர்கள், கொடிகளை வைக்கக் கூடாது என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அதிமுக பேனர்களை அகற்றும் பணிகள் தீவிரவாக நடந்து வருகின்றன.