பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார்.
அதன்படி இன்று பேசும் போது, பெண்களின் உழைப்பு மற்றும் சாதனைகளை கொண்டாடும் விதமாக, ‘பாரத் கீ லட்சுமி’(இந்தியாவின் லட்சுமிகள்) என்ற ஹாஷ்டேகை உருவாக்கி அதில் பெண்களின் சாதனைகளை பதிவிடுமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இன்று பேசுகையில், காந்தியின் 150 வது பிறந்தநாளின் போது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இ-சிகரெட்டுகளைப் பற்றி பேசிய அவர், நாகரிகம் என நினைத்து பல இளைஞர்கள் இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதாகவும், பின்னர் அதன் பிடியில் சிக்கி அதற்கு அடிமையாகி விடுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் சுவாசப்பிரச்சனை, இதயக் கோளாறு, நரம்பியல் கோளாறுகள் மற்றும் மரபணுக்களில் பாதிப்பு போன்ற பல பிரச்சனைகள் இ-சிகரெட்டுகளால் ஏற்படுகின்றன. உடல்நலத்திற்கு பல தீங்குகளை விளைவிப்பதால் இ-சிகரெட்டிற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குடும்பத்தில் எந்த ஒரு நபரும் சிகரெட் பிடிப்பவராக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இந்திய மக்களுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்.