ஐ.நா. பேரவையில் நேற்று (செப். 27) உரையாற்றிய பிரதமர் மோடி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார். ஐ.நா. கூட்டத்தில் அவர் பேசும்போது, ”ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பண்பாடு இந்தியப் பண்பாடு.
இந்தியாவின் வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு உதாரணம். வளரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம. அனைத்து மக்களையும் , எங்கள் மக்களாக கருதுகிறோம்.
புது இந்தியா, பன்னாட்டு நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கும். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் நாடு கூறியது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து கருத்துத் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில்,
”ஐ.நா. சபையில் தமிழ் சொன்னீர்கள்
பேரானந்தம் பிரதமர் அவர்களே.
தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால்
நன்றி உரைப்போம் நாங்களே!” என்று தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.