ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தமது புதிய அரசாங்கத்தில் பிரதமர் யாரென்பதையும் அமைச்சரவையையும் உடனடியாக வெளிப்படுத்தாவிட்டால் தாம் அவருக்கு ஆதரவளிப்பதிலிருந்தும் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதற்கு தாமும் தம்மோடு இணைந்து சிலரும் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் முன்னின்று செயற்பட்டோம். சஜித் பிரேமதாச தமது அரசாங்கத்தில் ஊழல்கள் நிறைந்த ஆட்சியிலுள்ளவர்களையே மீண்டும் நியமிப்பாரானால் எமது போராட்டத்திற்கு பயனில்லாமல் போகும்.
ஐக்கிய தேசியக் கட்சியும் அதனோடு இணைந்த கட்சிகளும் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலும் சஜித் பிரேமதாச அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
அவரை மிக மோசமாக சாடிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக கூறியுள்ளமையும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. எனவே இது தொடர்பில் தெளிவான பதிலளிக்குமாறு கோரி கடிதமொன்றை சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ளேன்.
அதற்கான பதில் கிடைத்ததும் தொடர்ந்தும் இருப்பதா அல்லது விலகிச் செல்வதா என்பது பற்றி தீர்மானிப்பேன். சஜித் பிரேமதாச எனது கடிதத்திற்கான பதிலை நேரடியாக அனுப்பவேண்டிய அவசியமில்லை. அவரது உரைகளில் அவர் அதை வெளிப்படுத்தினால் போதும்.
லோரன்ஸ் செல்வநாயகம்