டெல்லி மக்களை தவறாக வழிநடத்தியதன் மூலம் டெல்லியின் அமைதியை காங்கிரஸ் குலைத்து விட்டதாக அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டி வருவதாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற பிளவுபடுத்தும் குழுக்களுக்கு, உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி டெல்லி மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் டெல்லியின் அமைதியைக் காங்கிரஸ் குலைத்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் பற்றி நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது. அங்கு யாரும் எதுவும் பேசத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கி, டெல்லியை கலவர பூமியாக மாற்றிவிட்டனர்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் பலன்களை, ஏழை மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வழங்கவில்லை. ஏனெனில் அந்த திட்டத்தில் பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. மோடி வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால் இந்த ஆம் ஆத்மி அரசு, அதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.
கெஜ்ரிவால் முதல்வராகி, சுமார் 60 மாதங்கள் ஆகிவிட்டன, வாக்குறுதிகள் அனைத்தையும் ஏன் நிறைவேற்றவில்லை. அவர்கள் வாழ்க்கையில் செய்யும் ஒரே வேலை எதிர்ப்பு மற்றும் மறியல் ஆகியவைதான் என்று அமித் ஷா தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் செய்யப்பட்ட சாதனைகள் என்று குறிப்பிட்டு டெல்லி அரசு அறிமுகப்படுத்திய திட்டங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.