சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை என அஜித் தரப்பு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்திலிருந்தும் ஒதுக்கியிருப்பவர் அஜித். இதனிடையே, நேற்று (பிப்ரவரி 6) மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானதால் உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்களும் உற்சாகமானார்கள். இது தொடர்பாக அஜித் தரப்பில் இருந்து “அந்த அறிக்கை பொய்யானது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் தரப்பு வழக்கறிஞர் சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை. அஜித் வெளியிட்டதாக உலாவரும் கடிதம் பொய்யானது. எந்த சமூக ஊடகங்களிலும் இணைய அஜித்துக்கு விருப்பம் இல்லை. சமூக வலைதளத்தில் எந்த ஒரு ரசிகர் பக்கத்தையும், குழுவையும் அஜித் ஆதரிக்கவில்லை.
சமூக வலைதளங்களில் அஜித் இணைய உள்ளதாக அஜித் கடிதம் எதுவும் வெளியிடவில்லை. தவறான கடிதத்தை வெளியிட்டு கையெழுத்து மோசடி செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.