தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவுக்குத் தான் காரணம் என்று வெளியான செய்திக்கு ஷெரின் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
தர்ஷன் – சனம் ஷெட்டி இருவரும் காதலித்து வந்தார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் சென்றவுடன், சனம் ஷெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரும் வைரலானது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்கள். இவர்களுடைய பிரிவுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள், ஷெரினுடன் தர்ஷன் நெருக்கம் காட்டியதுதான் காரணம் எனத் தகவல் வெளியானது. இதை சனம் ஷெட்டியும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தர்ஷன் – சனம் ஷெட்டி இருவரின் பிரிவுக்கு ஷெரின் எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவு தொடர்பாக பலரும் பதிவிட்டு வந்தார்கள். சிலர் அவரை திட்டித் தீர்த்தார்கள்.
இந்நிலையில், தர்ஷன் – சனம் ஷெட்டி பிரிவு தொடர்பாக ஒரு நீண்ட கடிதத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன, நடந்திருக்கின்றன. என்னைத் தாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகச் செய்யட்டும். நான் இதில் தெரிந்துதான் ஈடுபட்டேன். என்னை நீங்கள் எவ்வளவு மோசமான பெயர்கள் கொண்டு அழைத்தாலும் என்னால் அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த விஷயத்தில் என் குடும்பத்தை இழுக்காதீர்கள்.
போலியான கணக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தாக்கும் அருவருப்பான கிண்டல்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டி வரும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. மற்றவர்களின் தவறுகளுக்காக என்னைக் குற்றம் சாட்டுவது என்னைக் குற்றவாளி போல உணர வைக்காது. அது குறுகிய மனப்பான்மை, பார்வை கொண்டவராகத்தான் உங்களை மாற்றும். யாரைக் குற்றம் சாட்டுவது என ஒழுங்காகக் தெரிந்து கொள்ளுங்கள்.
எனது அமைதியே எனது பலவீனம் என்று தவறாக நினைக்காதீர்கள். இந்த விஷயம் என்னைச் சார்ந்தது இல்லை என்பதால் தான் நான் எதையும் சொல்லவில்லை. இரண்டு பேர் பிரிவதை விட இந்த உலகில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. என்னுடன் நின்ற என் ஆதரவாளர்களுக்கு நன்றி.
எதிர்மறை கருத்துகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம் என நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதும் புரிகிறது. அந்தக் கோபம் எனக்குக் கருத்துப் பதிவிடுவதன் மூலம் தீர்கிறது. அமைதி தருகிறது என்றால் அவர்கள் பேசிவிட்டுப் போகட்டும். அது எனது அடிப்படை நெறிகளை மாற்றிவிடாது.
நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள். என்னுடனும் எனக்காகவும் சண்டை போடும் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள். இந்த விஷயம் குறித்து எனது ஒரே அதிகாரபூர்வ அறிக்கை இதுவாக மட்டுமே இருக்கும். இது குறித்த கேள்விகள், எதிர்வினைகளுக்கு நான் இனிமேலும் பதில் சொல்லப்போவதில்லை”.
இவ்வாறு ஷெரின் தெரிவித்துள்ளார்.