கரோனா வைரஸ் தொற்றுக்கு (கொவைட் -19) தோற்றுவாயான சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு ஜப்பானின் காய்ச்சல் மருந்து பெரும் மீட்க உதவியதாக சீனா அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவுக்கு அடுத்து கரோனாவால் அதிகம் போ் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. இத்தாலியில் இதுவரை 35,713 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,978 போ் கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா்.
இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனா்.மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கரோனா பரவியுள்ளது. கரோனா வைரஸை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
கரோனா வைரஸ் இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோரை தொற்றியுள்ளது. உலகளவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. சீனாவில் நேற்று எந்த பாதிப்பும் பதிவாக வில்லை. வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பத்தில் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபாபிபிராவிர் என்ற காய்ச்சல் மருந்து கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்ததாக அறிவித்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோவை தளமாகக் கொண்ட பியுஜி பிலிம் ஹோல்டிங்ஸ் தயாரிக்கும் ஃபாபிபிராவிர் மருந்து, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு வருவதாக சீனாவின் உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜாங் சின்மின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வூஹான் மற்றும் ஷென்சனில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஃபாபிபிராவிர் மருந்து கொடுக்கப்பட்டது. நான்கு நாட்களில் வைரஸுக்கு எதிராக மாறுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கரோனா பாதிக்கப்பட்ட 340 பேர் இந்த மருத்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தால் கரோனோவால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரின் உடல்நலம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. “இது அதிகயளவு பாதுகாப்பு மற்றும் சிகிச்சையில் தெளிவான பயனை தந்துள்ளதாகவும்” மேலும் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று கூறினார்.
அதுபோல் ஷென்சனில் உள்ள ஒரு மருத்துவமனை மற்றும் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 120 பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்து நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.என்.ஏ வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட மருந்து ஃபாவிபிராவிர் மருந்து அவிகன் என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது இன்ஃப்ளூயன்ஸா மருந்தின் பிராண்ட் பெயர். இதனை 2014 ஆம் ஆண்டு பியுஜி பிலிம் டோயாமா கெமிக்கல் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
மருத்துவ பரிசோதனைகளில் ஜப்பானிய மருத்துவர்களும் ஃபாவிபிராவிரை பரிசோதித்து வருகின்றனர், ஆனால் மிகவும் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று கூறப்படுகிறது.