கோவிட் 19-லிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்ற கேள்விக்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் தன் மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். முதன்முறையாக மணிரத்னம் சமூக வலைதளத்தில் கலந்துரையாடுவதால் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்கள்.
இந்தக் கலந்துரையாடல் சுமார் 1 மணிநேரம் வரை நீடித்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ரொம்பவே நிதானமாகவும், சந்தோஷமாகவும் மணிரத்னம் பதிலளித்தார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் அனுஹாசன், ஒற்றை வரியில் பதிலளிக்க வேண்டும் என்று மணிரத்னத்திடம் சில கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகளும், மணிரத்னத்தின் பதில்களும்.
எது சிறந்த விடுமுறை என்று நினைக்கிறீர்கள்?
வீட்டில் முடங்குவதை விட எதுவாக இருந்தாலும்…
கோவிட்-19லிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
ஜென் மனநிலையைக் கற்க வேண்டும்.
வீனஸ் ஸ்டுடியோஸ் பற்றிய உங்களது ஆரம்பக் கால நினைவுகள்?
அற்புதமான நினைவுகள். எனக்கு முதலில் நினைவுக்கு வருவது நான் அங்கு ‘ராஜபார்வை’ படப்பிடிப்பைப் பார்த்ததுதான். எட்டிப் பார்க்கத்தான் போயிருந்தேன். வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். நான், பிசி ஸ்ரீராம் எல்லாம் சென்று பார்த்தோம்.
இந்தப் பதிலை மணிரத்னம் கூறியவுடன், சுஹாசினி, “அந்தப் படத்தில் நான் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தேன். இவர் அப்போது என்னைக் கவனிக்கவேயில்லை” என்று கூறினார்.
யாரைச் சமாளிப்பது எளிது? அனுபவமுள்ள நடிகரையா அல்லது இயக்குநர் அனுபவம் பெற்ற நடிகரையா?
அவர்கள் நடிக்க வந்தால் நான் நடிகராக மட்டுமே பார்ப்பேன். அவர்களுக்கு இயக்கம் தெரியுமா என்பது பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன்.
(மேலும் யாராக இருந்தாலும் கடினம்தான் என்றும் நகைச்சுவையாக சொல்லி முடித்தார்)
சுஹாசினியைப் பற்றிய எந்த விஷயங்கள் உங்களை ஆச்சரியப்பட வைத்தன?
பெயரே ஹாசினி என்று சிரிப்பு வரவழைப்பதைப் போல இருக்கிறதே!
ஹாசினி பெண்களிடம் (சுஹாசினி குடும்பத்துப் பெண்கள்) பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம் என்ன?
மிகவும் அமைதியானவர்கள், பேசவே மாட்டார்கள். பேச வைக்கக் கஷ்டப்பட வேண்டும்.
(என்று நக்கலாகப் பதில் சொல்ல அதற்கு அனுஹாசன், சுஹாசினி இருவருமே சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தனர்.(தேவை)