நலிந்த வினியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்து வருகிறார் என டி.ராஜேந்தர் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்க உறுப்பினர்களில் சிலர் திரைப்பட வினியோக தொழில் செய்து நஷ்டம் அடைந்து நலிந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகை கிடைக்கும் வகையில், ஒரு திட்டம் தீட்டி வைத்து இருந்தோம். இதற்காக நான், ‘இன்னிசை காதலன்’ என்ற புதிய படத்தை தொடங்க இருந்தேன்.
ஆனால், கொரோனா பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஊரடங்கு என்று கைகள் கட்டப்பட்டு விட்டன. என் தர்மசங்கடமான நிலைமையை ராகவா லாரன்சிடம் எடுத்து சொன்னேன். அவர் மனமுவந்து எங்கள் சங்க அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம் வழங்கி இருக்கிறார். அவருக்கு எங்கள் சங்கம் சார்பில் நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.