சீனாவின் உகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இன்று உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை ஒவ்வொன்றும் தங்கள் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பறிகொடுத்துள்ளன.இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பல ஆயிரம் மடங்கு அதிகம்.
அதேநேரம், கொரோனாவால் பெரிதும் பாதிப்படைந்த உகான் நகரில் கடைசி நிலவரப்படி பலி எண்ணிக்கை 2,579 ஆக இருந்தது. சீனாவின் ஒட்டு மொத்த உயிரிழப்பும் கூட சில வாரங்களாகவே சுமார் 3,300-ல் நிலை கொண்டிருந்தது.
கொரோனா விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார்
இந்த நிலையில், உகான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதாவது, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும்.
அதேநேரம், உகான் நகரத்தில் கொரோனா பலி உயர்ந்ததுபோல் சீனா முழுவதற்கும் எண்ணிக்கை மாறுபடுமா? என்ற எதிர்பார்ப்பும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:-
கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்புகள் அனைத்தையும் அடையாளம் காணும் பணி ஒரு சவாலாக உள்ளது
பல நாடுகள் சீனா போன்று இதே சூழ்நிலையில் இருக்கப் போகின்றன என்று நான் எதிர்பார்க்கிறேன், நாடுகள் கொரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும் என கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும் போது அனைத்து நாடுகளும் சீனாவை போன்றே செயல்படும் ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களை சீக்கிரம் தயாரிக்குமாறு அவர் நாடுகளை கேட்டுக்கொண்டார்,