இலங்கை : பத்திரிகை செய்திகள் 20.04.2020 செவ்வாய்..!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 97 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

——–

வவுனியாவில் மதுபானசாலைகளுக்கு முன்னால் மதுப்போத்தல்களைப் வாங்குவதற்காக காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
வவுனியா உள்ளிட்ட 18 மாவட்டங்களின் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி பூட்டப்பட்ட மதுபானசாலைகள் ஒரு மாதத்தின் பின் இன்றைய தினமே மீள திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானப் போத்தல்களை வாங்குவதற்காக அதிகளவிலான இளைஞர்களும், முதியவர்களும் நீண்ட வரிசையில் காவல் நின்று பெற்றுக் கொண்டனர்.
குறித்த மதுபான சாலைகளுக்கு முன்னால் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் வரிசையில் நின்றவர்களை சமூக இடைவெளிகளை பேணுமாறும் மாஸ்க் அணியுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.

——

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் படுவதாக கூறப்பட்டு இருந்த போதிலும் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் குறித்த மாவட்டங்களுக்குள் எவருக்கும் உட்பிரவேசிக்கயோ அல்லது வெளியேறவோ முடியாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஏனைய மாவட்டங்களில் இன்று (20) தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுல்படுத்தப்படும்.
மேலும், குறித்த மாவட்டங்களில் ஏப்ரல் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளான வார இறுதிநாட்களில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

—–

வவுனியா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் திடீர் என்று மரணமடைந்துள்ளார்.
வவுனியா, தேக்கவத்தையை சேர்ந்த 07 வயதுச் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக நேற்று (19) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார்.
இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

——-

Related posts