நோய்நொடிகள் இல்லாத, சுபீட்சமானதொரு புத்தாண்டுக்கான பிரார்த்தனைகளுடன் உங்களை வரவேற்கின்றேன். அனைத்து இலங்கையர்களுக்கும் நோய் நொடிகள் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த புத்தாண்டுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன். இன்றைய நிலையில் கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக சாதாரண மக்கள் வாழ்க்கையில் நாம் முன்னெப்போதும் அனுபவித்திராத பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அது எமது தனிப்பட்ட, சமூக பிணைப்புக்கும், அதேபோன்று எம் அனைவருடையவும் தொழில்களுக்கும் பெரிதும் பாதிப்பை செலுத்தியுள்ளது. இந்த நிலைமை எமது நாட்டுக்கு மட்டுமான ஒன்றல்ல. தெற்காசியா, தூரகிழக்கு உட்பட மேற்கு நாடுகளையும் மிகப்பயங்கரமாக பாதித்துள்ளது. எமது அயல்நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்நாடுகளிலும் கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக உருவாகியுள்ள நிலைமை எந்தவகையிலும் திருப்தியளிப்பதாக இல்லை.
இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் தலைவராகவும் இலங்கையின் நிறைவேற்றுத்துறை தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் அமைச்சரவையின் தலைவராகவுமுள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எம்முடன் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்வது நான் மேலே கூறிய வகையில் தற்போது இலங்கை இந்த பயங்கர நோய்த்தொற்றுக்கு முகம்கொடுத்துள்ள விதம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்குவதற்காகவாகும். மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, உங்களுக்கு நோய்நொடிகளற்ற சுபீட்சமான புத்தாண்டுக்கான பிரார்த்தனைகளுடன் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கேள்வி – 01
ஆரம்பமாக ஜனாதிபதி அவர்களே, அரசாங்கம் அண்மைக் காலங்களில் கொவிட் 19 வைரஸ் நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நீங்கள் திருப்தியடைகின்றீர்களா என்பது பற்றியும், அதேபோன்று அச்செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் நீங்கள் நன்கறிவீர்கள் என்றவகையில் அதுபற்றியும் எமக்கு விளக்குமாறு உங்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
பதில்
இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையின் கீழ் நிலை ஊழியர்கள் முதல் பொதுச் சுகாதார அதிகாரிகள், தாதிகள், வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பெரும் பணியை செய்திருக்கின்றார்கள். அதேபோன்று முப்படையினர், பொலிஸார், புலனாய்வுத்துறையினர் பாரிய பணியை செய்து வருகின்றார்கள்.
அதேபோன்று இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றார்கள்.
இந்த அனைவருடையவும் அர்ப்பணிப்பின் பிரகாரம் தான் இன்று நாட்டை இந்த பிரச்சினையிலிருந்து விடுவிக்க, கட்டுப்படுத்த எமக்கு இயலுமாகியுள்ளது. கஷ்டங்களுக்கு மத்தியில் இந்த நிலைமைக்கு முகம்கொடுத்த நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
2019 டிசம்பர் மாதம் தான் கொரோனா வைரஸ் அல்லது கொவிட் 19 என்ற இந்த புதிய வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் சீன அரசாங்கம் இந்த வைரஸ் அபாயத்தினை விளங்கிக்கொண்டு உலகின் ஏனைய நாடுகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தது.
அப்போது சீனாவின் வூஹான் நகரில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர்கள் மற்றும்; அவர்களது நெருங்கிய உறவனர்கள் 34 பேரை இலங்கைக்கு கொண்டுவரும் சவால் எமக்கிருந்தது. அந்த வகையில் விசேட விமானமொன்றை சீனாவுக்கு அனுப்பி பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி நாம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்தோம். என்றாலும் அவர்களின் மூலம் எந்த வகையிலும் நோய் நாட்டிற்குள் வருவதை தவிர்ப்பதற்காக மிகவும் முறையான ஒழுங்கில் நோய்த்தடுப்பு நிகழ்;ச்சித் திட்டமொன்றை தியதலாவை இராணுவ முகாமில் நாம் ஏற்பாடு செய்தோம்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நானும், எனது அரசாங்கமும் இந்த நோய்த் தொற்றின் எதிர்கால அபாயத்தை ஏலவே புரிந்துகொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தோம். ஜனவரி மாதம் 26ஆம் திகதி எனது தலைமையில் சுகாதார அமைச்சு, முப்படையினர், பொலிஸார், புலனாய்வுத் துறை உள்ளிட்ட குறித்த துறைகளை உள்ளடக்கி விசேட செயலணியொன்று தாபிக்கப்பட்டது. அதன் மூலம் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
ஜனவரி 27ஆம் திகதி தான் இலங்கையில் முதலாவது நோய்த் தொற்றாளியாக ஒரு சீன நாட்டு பெண் இனம்காணப்பட்டார். அப்போது இலங்கையர்கள் பெருமளவு தொழில் செய்யும் இத்தாலி, கொரியா போன்ற நாடுகளில் நோய்த்தொற்று பரவியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் இத்தாலி, கொரியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவானோர் நாட்டுக்கு திரும்பியிருந்தது எமக்கு தெரியவந்தது. அவர்களின் ஊடாக நோய் இலங்கைக்குள் பரவும் அபாயமிருந்தது.
அந்த வகையில் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இத்தாலி, கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரையும் நோய்த்தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என நாம் உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டோம்.
அந்த வகையில் பெப்ரவரி மாதம்; 16ஆம் திகதி இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் நோய்த்தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப நாம் தீர்மானித்தோம். மார்ச் 12ஆம் திகதியாகும் போது அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கினோம். ஒரு பிள்ளைக்கேனும் நோய்த்தொற்று ஏற்படுமானால் அது அதிகளவானோருக்கு பரவும் அபாயம் இருந்தது.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மூடியது மட்டுமன்றி அவர்களுக்கு தொலைக்கல்வியின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயலணியொன்றை அமைத்தோம்.
மார்ச் மாதம் 18ஆம் திகதியாகும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை விமான நிலையத்திற்கு விமானப் பயணிகள் வருவதை முழுமையாக நிறுத்தவும், இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு சென்றிருந்த 900 யாத்திரிகர்களை அழைத்துவர விசேட விமானமொன்றை அனுப்பி அவர்களை அழைத்து வந்து அவர்களை நோய்த்தடுப்புக்கு உற்படுத்தவும் நாம் நடவடிக்கை எடுத்தோம். மார்ச் 20 முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காரணத்தினால் மார்ச் 20 முதல் 27 வரையான காலப்பகுதியை அரச ஊழியர்களுக்கு நாம் முதலில் வீடுகளில் இருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனப்படுத்தினோம்.
ஜனவரி 27ஆம் திகதி முதன் முதலாக நோய்த்தொற்றாளராக இனம்காணப்பட்ட சீன நாட்டுப் பெண் சுகமடைந்து பெப்ரவரி 19ஆம் திகதி நாட்டிலிருந்து சென்றதன் பின்னர் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் மார்ச் 11ஆம் திகதி இனம்காணப்பட்டார். அவர ஐடீஎச் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் நோயாளிகள் இனம்காணப்பட்டனர். குறிப்பாக இந்த நோய்த்தொற்றாளர்களில் 38பேர் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து வந்து நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள். அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நோய்த்தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களில் 79பேர் நோயாளிகளாக இனம்காணப்பட்டனர். பல்வேறு வழிகளில் வெளியில் நோய்த்தொற்றுக்குள்ளான 136பேரை நாம் இனம்கண்டுள்ளோம்.
கேள்வி
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, நீங்கள் இராஜதந்திர செயற்பாடுகள் குறித்தும் நல்ல விளக்கமுள்ள ஒருவர். இந்த கொவிட் 19 வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகளை குறித்த தினங்களுடன் முழு நாட்டுக்கும் தெளிவாக குறிப்பிட்டீர்கள். இதன் மூலம் இந்த நோய்த் தொற்று குறித்து அரசாங்கம் மிகத் தெளிவாக செயற்பட்டிருப்பது எமக்கு தெளிவாகிறது. நோய்த்தொற்றுக்குள்ளான ஒருவர் இனம்காணப்படுமிடத்து அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடு குறித்து விளக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
பதில்
தினமும் எனக்கு இது குறித்த அதிக தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அதன் அடிப்படையில் தான் நான் சரியான தீர்மானங்களை மேற்கொண்டேன். புலனாய்வுத் துறை தலைவர் இது தொடர்பில் என்னுடன் ஒரு பெரும் பணியை செய்திருக்கின்றார்.
நாம் கொரோனா ஒழிப்பிற்காக ஆரம்பம் முதல் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்ததன் காரணமாக ஒவ்வொரு நோயாளி சம்பந்தமாகவும் அனைத்து விபரங்களும் எம்மிடமுள்ளன. இந்த நபருக்கு எப்படி நோய்த்தொற்று ஏற்பட்டது, அவர் எங்கெங்கெல்லாம் சென்றிருந்தார், யார் யாருடன் பழகியிருந்தார், அது மட்டுமன்றி அவருடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் சென்றுவந்த இடங்கள் அவர்களின் மூலம் தொற்றுக்குள்ளானவர்களையும் நாம் ஏலவே இனம்கண்டோம். அதன் காரணமாக இவர்களை உரிய வேலையில் நோய்த்தடுப்புக்கு உட்படுத்த முடியுமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட முன்னர் நோய்த்தொற்றுள்ளவர்கள் அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்திருப்பதாக நோய்த்தடுப்பு மத்தியநிலையங்களுக்கு வெளியே பின்னர் கண்டறியப்பட்ட நோயாளிகளின் மூலம் தெரியவந்தது. அதேபோல் ஆரம்ப காலத்தில் கவனத்தைப் பெறாத இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டுக்கு வருகைதந்திருந்தனர். அவர்கள் நோய் அறிகுறிகள் வெளியாகி சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வந்த போது அவர்களை எமக்கு இனம்காண முடியுமாக இருந்தது. எவருக்கேனும் கொரோனா நோய் அறிகுறி இருக்குமானால் நாம் அவர்களை ஐடீஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி PCR என்ற இதற்காக உலகில் உள்ள மிகச்சிறந்த பரிசோதனையை செய்தோம்.
நாம் அவ்வாறு நோயாளி ஒருவரை இனம்காணும் வேலையில் அவரது குடும்பத்தினரையும் அடுத்ததாக அந்த நோயாளியுடன் நெருங்கிப் பழகியவர்களையும் அந்த நோயாளி ஏதேனும் இடங்களுக்கு சென்றிருந்தால் யாருடனேனும் பழகியிருந்தால் அந்த அனைவரையும் நோய்த்தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தோம்.
இந்த அனைவரையும் அவர்களுக்கு எப்படி நோய்த்தொற்று ஏற்பட்டது, யாரின் மூலம் ஏற்பட்டது என்ற அனைத்து விபரங்களையும் நாம் ஆராய்வோம். இந்த நடைமுறையை நாம் தொடர்புடையவர்களை இனம்காணுதல் CONTACT TRASING என்போம். இவ்வாறு CONTACT TRASING மூலம் இனம்காணப்படும் குழு CLUSTER ஆகும். இந்த அனைத்து நோயாளிகளையும் வேறுபடுத்தி நோயாளிகளாயின் சிகிச்சை நிலையங்களுக்கும் அவருடன் பழகியவர்களை நோய்த்தடுப்பு நிலையங்களுக்கும் அனுப்பப்படும். இதற்கு மேலதிகமாக அதனைப் பார்க்கிலும் தூரத்தில் உள்ளவர்களை நாம் அவர்களின் இல்லங்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றோம். பொதுச் சுகாதார அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை பரிசோதிக்கின்றனர்.
அந்த வகையில் அவர்களை நோய்த்தடுப்பு நிலையங்களுக்கோ அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கோ உட்படுத்துகின்றோம். சிலபோது பெருமளவானோர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்குமானால் முழு கிராமத்தையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தற்போது பெரும்பாலானவர்கள் இவ்வாறு குழுவாக இனம்காணப்பட்டிருந்தவர்களில் இருந்தே கண்டறியப்படுகின்றார்கள்.
தற்போது சமூகத்தில் இந்த நோய் பரவுவதை நாம் குறைத்துள்ளோம். ஏலவே நாம் நோயாளிகளை இனம்கண்டு அந்த நோயாளியுடன் தொடர்புபட்ட அனைவரையும் நோய்த்தடுப்புக்கு உட்படுத்திய காரணத்தினால் சமூகத்தில் நோய் பரவுவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது.
இந்த CONTACT TRASING ஊடாக புலனாய்வுத் துறை சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இலங்கையினால் இதனை கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது என பத்திரிகைகளில் பிரசுரமாகயிருந்ததை நான் கண்டேன்.
கேள்வி – 03
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே மேற்கொண்ட செயற்பாடுகள், அவற்றின் பெறுபேறுகள் குறித்து விளக்கினீர்கள். அவ்வாறே அந்த நடவடிக்கைகள் குறித்து நீங்களும் திருப்தியடைகின்றீர்கள் என்பதை விளக்கினீர்கள்.
சமூக இடைவெளியை உறுதிப்படுத்த ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் மக்களுக்கு இந்த பயங்கர நோய்த்தொற்றுக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டாலும் அவர்கள் பலவிதமான கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாக மக்கள் மத்தியில் கருத்துகள் உருவாகின. குறிப்பாக அத்தியாவசிய உணவு போன்றவற்றை பெற்றுக்கொள்ளுதல், மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் முண்டியடித்துக்கொண்ட நிலையை நாம் கண்டோம். இது குறித்து நீங்களும் கவலையடைந்திருந்ததை நாம் கண்டோம். அரசாங்கம் என்ற வகையில் நீங்கள் இதனை எப்படி பார்க்கின்றீர்கள்.
பதில்
ஊரடங்கு சட்டம் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு தடை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் நாம் நாடு என்ற வகையிலும் மக்கள் என்ற வகையிலும் கண்களுக்கு தெரியாத ஒரு எதிரியுடன் போரிட வேண்டியிருந்தது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் மக்களுக்கு உணவை சேர்த்து வைக்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். எனவே அரசாங்கம் மக்களுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டது. குறிப்பாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட முன்னரேயே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சேமித்து வைக்கத்தக்க உணவுகளான பருப்பு, செமன் போன்றவற்றின் விலையை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்தோம்.
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினாலும் விவசாயம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளுக்கு தாக்கம் செலுத்தும் துறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் முடியுமானளவு முயற்சிசெய்தது. அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில் சிறுபோகத்தின் போது நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவர்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக பெருமளவு அன்றன்றைக்கு நாட் சம்பளம் பெற்றுவந்தவர்களும் அதேபோன்று தொழிற்சாலைகளில் தொழிற்செய்தவர்கள் சுயதொழில்களில் ஈடுபட்டவர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சுமார் 1.5 மில்லியன் சுயதொழில்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தமது அன்றாட வாழ்க்கையை கொண்டுநடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. எனவே முடியுமானளவு மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பல்வேறு அளவுகோள்களின் அடிப்படையில் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான பண உதவியை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களின் தேவைகள் பற்றி கேட்டறிந்து தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க நாம் விசேட செயலணியொன்றை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அமைத்தோம். இந்த செயலணி அனைத்து துறைகளையும் கவனத்திற்கொண்டு பாரிய சேவையை செய்துள்ளது என நான் நினைக்கின்றேன். அதேபோன்று மக்களின் இயல்புவாழ்க்கையை பேணும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது. மாதச் சம்பளம் பெறுவோருக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு உரிய வேலையில் அதனை வழங்கினோம். அவர்களது கடன் தவனைகள் இடைநிறுத்தப்பட்டன. நாளாந்தம் தொழில் செய்து வாழ்க்கையை நடத்துகின்றவர்களுக்கு பல்வேறு வசதிகளை பெற்றுக்கொடுத்தோம். இதனை நாட்டில் உள்ள அனைவரும் அறிவார்கள். முச்சக்கர வண்டிகளில் நாளாந்தம் வருமானம் உழைப்பவர்கள், பாடசாலைகள் வேன்கள், பஸ் வண்டிகளை வைத்திருப்போருக்கு லீசிங் போன்றவற்றை செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளாதார கஷ்டங்கள் உள்ளவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஊழியர்களின் சம்பளத்தை வழங்கமுடியாதுள்ள தனியார் நிறுவனங்களுக்கும் நாம் நிவாரணங்கள் வழங்கியிருக்கின்றோம். பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மக்களுக்கு இவ்வாறான பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சில அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் அந்த விடயங்களை மேற்கொள்கின்றோம். இந்த நிலைமைகளை வேறு வேறு நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச சேவை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அரச சேவையின் இயலுமை காரணமாகவே இவற்றை செய்ய முடிந்துள்ளது.
கேள்வி -04
இப்போது எமது பொருளாதாரம் பற்றி நீங்கள் புதிதாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது. நீங்கள் இந்த நாட்டின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை முன்வைத்திருந்தீர்கள். அதில் பொருளாதார மூலோபாயம் குறித்து மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் அந்த மூலோபயங்களை முன்னெடுத்திருப்போமேயானால் நாம் குறித்த ஒரு நிலையை அடைந்திருக்க முடியும். இந்த மூலோபாயங்கள் குறித்து நாம் புதிதாக சிந்திக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் என்ன செய்கின்றது என முழு நாடும் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இது எமது மக்களின் வாழ்வாதாரம் குறித்தும் தாக்கம் செலுத்தும் ஒரு அம்சம். இது குறித்து உங்களது கருத்து என்ன.
பதில்
குறிப்பாக எமது பொருளாதாரத்தின் பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எமது பொருளாதாரத்தை எப்படி கட்டியெழுப்புவது என்பது பற்றி சுமார் ஒரு மாதத்திற்கு பின்னோக்கி சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நோய்த் தொற்றின் காரணமாக எமக்கு அந்நியச் செலாவணி, தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் சுற்றுலா துறை, சுய தொழில்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள், ஆடைக் கைத்தொழில், ஏனைய ஏற்றுமதித் துறைகள் பாரிய பின்னடைவை கண்டுள்ளன. எமது பொருளாதார திட்டத்தை மாற்றி சுதேச பொருளாதார திட்டமொன்றுக்கு செல்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பம். கடந்த காலத்தில் எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமானவைகளும் கூட வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டன. எமக்கு விவசாயத்தின் மூலம் தன்னிறைவடைவது மட்டுமன்றி எமது நாட்டின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது எமது பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். நாம் படிப்படியாக எமது பொருளாதாரத்தை ஒரு நிலைமைக்கு கொண்டுவந்தாலும் முழு உலகினதும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வராதபோது நாம் கட்டாயம் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.
உதாரணமாக எமது சுற்றுலா துறையை எடுத்துக்கொள்வோம். சுற்றுலா பயணிகள் குறிப்பாக வருகைதரும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து எப்போது சுற்றுலாப் பயணிகளால் வரமுடியும் என்பதை எமக்கு எண்ணிப்பார்க் முடியாது. எந்த நாடுகள் இந்த பிரச்சினையிலிருந்து விரைவில் மீண்டெழும் என்பதைப் பொருத்தே அந்நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கொண்டுவருவது குறித்து சிந்திக்க முடியும்.
அதேபோன்று ஏற்றுமதி துறையில் புதிய சந்தைவாய்ப்புகளை நாம் தேட வேண்டியிருக்கும். சுகாதர துறைக்கு தேவையான பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தகவல் தொழிநுட்பத் துறை அனைத்து நாடுகளினாலும் தடையின்றி முன்னெடுக்க முடியுமான ஒரு துறை. சுமார் மூன்று மடங்கு சேமிப்பை கொண்டுவரும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அதேபோன்று நாட்டினுள் தொழில்வாய்ப்புகளை உருவாக்க நல்ல சந்தர்ப்பம்.
உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. எங்களுக்கு மட்டுமன்றி முழு உலகமும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றன. நாம் தன்னிறைவடைவது மட்டுமன்றி உணவு ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதி துறையில் கவனம் செலுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம்.
அதேபோன்று விவசாயிகளின் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதும் முக்கியமான விடயமாகும். அவர்களுக்கு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். புதிய தொழிநுட்ப முறைமையை அறிமுகப்படுத்தி இத்துறையை முன்னேற்றுவதற்கு எமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த தொழிநுட்பத்தை கொண்டுவந்து நாம் இளைஞர்களையும் விவசாயத் துறையில் ஈடுபடுத்தி கைத்தொழில்ளை உருவாக்குவதற்கும் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் இது முக்கியமானதாகும்.
ஓவ்வொரு நாளும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். அதேபோன்று அரசுக்கு சொந்தமான பெரும் நிலப்பரப்புகள் உள்ளன. எனினும் அவை நட்டத்தில் உள்ளன. இவற்றை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதேபோன்று தேயிலை தோட்டங்கள் உள்ளன. அவையும் நட்டத்தில் உள்ளன. இவற்றை நாம் இலாபமீட்டும் நிலைக்கு மாற்ற வேண்டும். இவற்றை வினைத்திறனாக இலாபமீட்டும் நிலைக்கு மாற்றி துணைப்பயிர்களை செய்து அனைத்து தரிசு நிலங்களிலும் பயிரிட வேண்டும்.
தேயிலைச் சபை வரலாற்றில் முதல் தடவையாக தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தொலை முறைமையில் தேயிலை ஏலவிற்பனையை மேற்கொண்டதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறு சுதேச பொருளாதாரத்தை, பொருளாதார மாதிரியொன்றை நாம் உருவாக்க வேண்டும். அதன் போது புதிய சந்தைவாய்ப்புகளுக்கான நிலைமைகளை முன்னேற்ற வேண்டும்.
கேள்வி – 05
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதில்லை. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பெலாரஸ் போன்ற பல நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பினர் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இவர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதில்
அதற்கானதொரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ள பல்வேறு தரப்பில் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு அழைத்துவர முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை அழைத்துவருவதற்கு முறைமையொன்று வகுக்கப்பட்டுள்ளது. அவர்களை விமான நிலையத்திலேயே பீசீஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீசீஆர் பரிசோதனையின் பின்னர் அவர்களை நேரடியாக நோய்த்தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பவும் அதேபோல் ஏனையவர்களுக்கு வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து இறுதி வரை திட்டமிட்டுள்ளோம். குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மட்டுமே ஒரு நாளைக்கு எமக்கு அழைத்துவர முடியும். அந்த வகையில் பல்வேறு காரணங்களை கவனத்திற்கொண்டு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். குறித்த நாடுகளில் நாம் அனுமதி கோரியுள்ளோம். ஏனெனில் அந்த நாடுகளிலும் பணிகள் முடக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே எமது விமானங்களை அனுப்புவதற்கு நாம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அவர்களை அழைத்துவர நாம் நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி 06.
நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையாது முன்னெடுத்துச் செல்லவும், மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னேற்றுவது தொடர்பாகவும், நீங்கள் எந்நேரமும் அக்கறை காட்டினீர்கள். இது பற்றி எவ்வாறான வேலைத்திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்
பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மக்களுக்கு நீண்ட காலம் ஊரடங்குசட்டத்தை அமுல்படுத்தி வீடுகளில் முடக்கிவைத்தால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக மட்டுமன்றி இவ்வாறான அனைத்து பிரச்சினைகள் பற்றியும் கவனித்தே நாம் பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம். இது பற்றி பொருளாதார நிபுணர்களான, மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். நாட்டில் உள்ள வியாபாரிகளில் பொருளாதாரம் தொடர்பாக அறிந்தவர்களுடன் இந்தப் பிரச்சினை பற்றி கலந்துரையாடினோம். விசேடமாக வைரஸ் தொடர்பாக தோன்றியிருக்கும் தேவைப்பாடுகளை அதுபோன்று நாட்டை திறந்தவுடன் தோன்றுகின்ற தேவைகளை ஒன்றினைத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் நாட்டை இயங்கச்செய்வதற்காகவே நாம் தீர்மானம் எடுத்தோம்.
இங்கு நாம் கவனித்தோம்; எப்பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கிறார்கள் என்று. நாம் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்திய சந்தர்ப்பத்தில் புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை போன்ற இடங்களில் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்தவில்லை. நாம் பார்த்தோம் எந்த சிறிய பகுதிகளில் இவர்களை தனிமைப்படுத்த முடியும் என்று. நாம் பார்த்தோம் பொலிஸ் பிரிவுகள் ரீதியாக இவர்களை தனிமைப்படுத்த முடியுமா என்று. அவ்வாறு அதிகமானவர்கள் வாழும் பொலிஸ் பிரிவுகளை ஒருபோதும் திறக்க முடியாத காரணத்தால் இந்த ஊரடங்கச்சட்ட கட்டுப்பாட்டு முறைகளை செயற்படுத்த நாம் தீர்மானித்தோம். ஒரு சில மாவட்டங்களில் தொற்றுக்குள்ளான எவரும் இல்லை. சில மாவட்டங்களில் ஒருவர் அல்லது இருவரே காணப்பட்டனர். அவர்களும் அப்பிரதேசங்களில் தொற்றுக்குள்ளானவர்கள் அல்ல. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். இவ்வாறான மாவட்டங்களை எமக்கு இலகுவாக திறக்க முடியும். அதனாலேயே கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான முறைமையொன்றை நாம் தீர்மானித்தோம். இத்தீர்மானத்தை நாம் எடுத்ததற்கான காரணம், வியாபாரங்கள், தொழிற்சாலைகள், நாட்டினுள் பயிரிடப்பட்டுள்ள மரக்கறி போன்ற விடயங்களுக்கு நாட்டினுள் தமது வியாபார நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்காகும். அரச சேவை ஒரு மாத காலமளவு முடங்கியுள்ளது. அரச சேவையில் மூலம் பல்வேறு சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். பாரிய பொறுப்பொன்று மக்களுக்குள்ளது. நாம் இவ்வாறு நாட்டின் செயற்பாடுகளுக்காக திறந்தாலும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்காவல்ல இவ்வாறு திறக்கப்படுகின்றது. நாம் அரசாங்கம் என்ற வகையில் சுகாதார திணைக்களத்தின் மூலம் மற்றும் பொலிஸ், முப்படையினரின் மூலமும் முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களிலும் இருந்து முழுமையான பிரதிபலனை பெற்றுக்கொள்வது, மக்கள் பொறுப்புடன் செயற்படுவதிலேயே தங்கியுள்ளது. நாம் செய்திகளில் பார்க்கின்றோம், பாரிய அளவிலானோர் ஊரடங்குச்சட்டத்தை மீறியுள்ளனர். வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொறுப்புடன் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி நடக்குமாறு நான் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்த வைரஸின் காரணமாக ஏற்பட்டுள்ள சவால் இன்னும் முடியவில்லை. நாம் கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்துள்ளோம். அவற்றை அவ்வாறே நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
கேள்வி 07
கௌரவ ஜனாதிபதி அவர்களே, நாம் இதுவரை கலந்துரையாடியது, கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் பெறுபேறுகள், அத்துடன் கொரோனா தொற்றுநோயினால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு ஏட்பட்ட பாதிப்புக்கள், பொருளாதார பின்னடைவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான குறுகிய கால நடவடிக்கைகள் பற்றியாகும். ஒரு சிலர் கேட்கிறார்கள் ஏன் நாட்டினை திறக்கும் செயற்பாட்டை இன்னும் சிறிது காலம் தாமதிக்கக்கூடாது என்று?
பதில்
எமது நாட்டின் பொருளாதாரத் துறைக்கு நூற்றுக்கு 50 வீதமான பங்களிப்பை மேல் மாகாணமே வழங்குகின்றது. இவர்களுக்கு இச்சந்தர்ப்பம் வழங்கப்படாவிடின் மேலும் தாமதித்தால் நாம் பொருளாதார ரீதியாக பாரிய சவாலுக்கு ஆளாக நேரிடும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். அது மட்டுமன்றி சமூக ரீதியாக நாள் கூலி பெறுபவர்களே பாரிய சிக்கலுக்குள்ளாயினர். அதனால் தான் குறைந்தளவிலாவது பொருளாதார உதவியொன்றை செய்வதற்கு முன்வந்தோம். எமக்கு இன்னும் ஒரு மாத காலம் மூடிவைக்க முடியுமாக இருப்பின் நான் அதனையே விரும்புகின்றேன். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் எமக்கு ஆழமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியேற்பட்டது. சாதாரணமாக ஒரு மாதம் நாட்டை மூடிவைத்தால் என்ன நிலைமை ஏற்படும்,
இவ்வாறு திறப்பதனால் யாருக்காவது ஏதாவது சந்தேகம் ஏற்படுமாயின் அச்சந்தேகத்தை தீர்த்துவைப்பதற்கும் மக்களாலேயே முடியும். நாம் ஏன் மூடியுள்ளோம், நாம் ஏன் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்துகிறோம், மனிதர்கள் ஒன்று சேருவதை தவிர்த்து இந்த இடைவெளியை நடைமுறைப்படுத்துவதற்காகும். இவ்வாறான காரணங்களினாலேயே இதனை நிறுத்த முடியாதுள்ளது. நாம் பொதுமக்கள் என்ற வகையில் பொறுப்புடன் இவற்றில் இருந்து தவிர்ந்திருப்போமாயின் இப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க மாட்டோம். நாம் போலிஸ் மற்றும் முப்படையினரில் ஒரு பிரிவினரை விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக நியமித்துள்ளோம். கடந்த காலங்களில் அவர்கள் பல்வேறு இடங்களில் சேவையில் ஈடுபட்டனர். ஆனால் நான் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்தேன் இப்பிரதேசத்தை யுத்த காலத்தில் இருந்தவாறு கட்டுப்பாடுகளுடன் ஒழுக்க நெறிமுறையுடன் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவிடாது இக்காலத்தில் இப்பிரதேசத்தை நிர்வகிக்குமாறு.
கேள்வி 08
ஜனாதிபதி அவர்களே, இத்தொற்றுநோய் போன்று மக்களுக்கு மேலும் ஒரு முக்கிய விடயம் உள்ளது. நீண்டகாலத்தை அடிப்படையாக வைத்து நோக்கும்போது உறுதியான ஒரு அரசாங்கம் காணப்படவேண்டும். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக முன்னெடுக்க அதற்காக பாராளுமன்றத்தேர்தல் ஏப்ரல் 25 நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், அதனை குறித்த அத்தினத்திலேயே நடத்த முடியாது என்றே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது பற்றிய உங்களது கருத்து என்ன?
பதில்
2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நான் 69 இலட்சம் தெளிவான மக்கள் ஆணையினை பெற்றே வெற்றிபெற்றேன். நான் சுபீட்சத்தின் நோக்கு என்ற பெயரில் கொள்கைப்பிரகடனம் ஒன்றை முன்வைத்தேன். இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக முறையில் தங்களது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்துக் கொண்டது அந்த கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தவதற்காகும். அதற்காக மக்கள் எனக்கு அனுமதியை வழங்கினாலும் 2015 ஆகஸ்ட் மாதம் தெரிவுசெய்யப்பட்டிருந்த பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்படுவேண்டிய நிலையே எனக்கு ஏற்பட்டது. அப்பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்தியது தற்கால மக்கள் ஆணையை அல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் காணப்படாததால் என்னால் குறுகிய அதிகாரம் உடைய அரசாங்கத்தை அமைக்கவே முடியுமாக இருந்தது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்கும்போது பாராளுமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த அரசாங்கம் நாட்டில் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தது, இடைக்கால வரவுசெலவு கணக்கொன்றின் மூலமே ஆகும். அக்காலகட்டத்தில் நாடு பாரிய பொருளாதார சவாலுக்கு உள்ளாகியிருந்தது.
மக்கள் எதிர்பார்த்த வகையில் எனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் புதிய வரவுசெலவுத்திட்டம் அல்லது இடைக்கால வரவுசெலவுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது அவசியமாக இருந்தது. நாம் வாக்களித்தது போல் கல்விக்காக அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு, தொழில்நுட்ப மற்றும் விவசாய துறையை அபிவிருத்தி செய்ய, புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த, வீழ்ச்சிக்குள்ளாகியுள்ள பொருளதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்துக்கு நிதி முகாமைத்துவ அதிகாரம் காணப்படவேண்டும்.
இதனால்தான் அரசியலமைப்பின் மூலம் எனக்குள்ள அதிகாரத்திற்கமைய கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே மார்ச் மாதம் 02 ஆம் திகதி, இருந்த பாராளுமன்றத்தை கலைத்து உண்மையான மக்கள் கருத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதற்காக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கும் புதிய பாராளுமன்றத்தை மே மாதம் 14 ஆம் திகதி கூட்டுவதற்கும் நான் தீர்மானித்தேன். அதனடிப்படையில் சுயாதீனமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான முழுமையான சுதந்திரம் மற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொறுப்பு கையளிக்கப்பட்டது. என்னுடைய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினதும் பிரதான கடமை மற்றும் பொறுப்பு தேர்தலின் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மதித்து குறித்த காலத்தில் தேர்தலை நடத்தி மக்களின் இறையான்மையை உறுதி செய்வதாகும்.
ஆனால் தற்போதைய தொற்றுநோய் காரணமாக காலவரையறையின்றி தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தை கலைத்து 03 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் புதிய பாராளுமன்றம் ஒன்று கூட்டப்பட வேண்டிய இறுதித்திகதி ஜூன் மாதம் 02 ஆம் திகதியாகும். அதற்காக தேர்தலை எத்தினத்தில் நடத்துவது என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டியது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த தினத்தை மாற்றிய சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவாகும்.
தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் உண்டு. அவர்களுக்கு அவசியமாயின் தேர்தலுக்காக ஒரு நாளின்றி பல நாட்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தற்போதைய அரசியலமைப்பில் தேர்தல்கள் தொடர்பாக பாரியளவு அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.
தேல்தலை நடத்துமாறு அல்லது ஒத்திவைக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்க நான் தயாரில்லை. நான் இதுவரை அனைத்து நடவடிக்கைகளையும் அரசியலமைக்கு அமைய மேற்கொண்டிருப்பதோடு, புதிய பாராளுமன்றத்தை கூட்டும் நாளையும் அறிவித்துள்ளேன். சில நேரம் ஜூன் மாதம் 02 ஆம் திகதி ஆகும்போது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டிருக்காவிடின் எனக்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு முடியாது. அதனை வேரொரு நாளிலேயே நடத்த வேண்டும். எவ்வாராயினும் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அவசியமில்லை. அதற்கான சட்டரீதியான அதிகாரமும் இல்லை.
தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது அரசு முன்னெடுத்துள்ளது. நாட்டின் அனைத்து பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு குழுக்கள் தேர்தலுக்காக உரிய முறையில் வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளன. அதனடிப்டையில் தேர்தலை நடத்தும் பொறுப்பு தற்போது சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. அதற்காக அவர்களுக்கு அவசியமான அனைத்து யாப்பு ரீதியான ஒத்துழைப்பையும் அரசு வழங்கியுள்ளது. தேர்தல் நிறைவுபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நான் தயாராக உள்ளேன்.
கேள்வி 09
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, தற்போது எதிர்கட்சியின் பல்வேறு குழுக்கள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு இது உகந்த சந்தர்ப்பம் அல்ல என்று குறிப்பிட்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தமது கருத்துக்களை வெளியிடுகின்றன. எப்போது அதனை நடத்துவது என்பது பற்றியும் அவர்கள் எக்கருத்தையும் முன்வைப்பதில்லை. இது பற்றிய தங்களது கருத்து என்ன?
பதில்
தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுமாறு கூறுவதின் மூலம் நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்கு கொண்டு செல்ல முடியும் என்று கனவு காண்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை மக்கள் சரியாக புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு எது தேவை, அதனை எவ்வாறு செயற்படுத்துவது தொடர்பாக விசேட அரசியலமைப்பு ரீதியான பிரச்சினை தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்பதும் அரசியலமைப்பின் பிரகாரம் எது நடைபெறவேண்டும் என்பது தெளிவாக உள்ளதுடன், இறுதிப்பொறுப்பு யாரிடமுள்ளது என்பது பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை என்பதையும் இத்தருனத்தில் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறேன்.
அனைத்து நாடுகளையும் மண்டியிடச்செய்த கொரோனா சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் செயற்படவும்; நான் எதிர்பார்க்கின்றேன், அதற்கு அவசியமான ஒத்துழைப்பை நாட்டை நேசிக்கும் உங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கின்றேன்.