இலங்கை ஊடகங்களில் இன்று முக்கியம் பெற்ற குறுஞ்செய்திகள் 22.04.2020

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்த நிலையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அன்றைய நாட்டுத் தலைவர் உட்பட அரசியலில் சகல மட்டத்தில் உள்ளோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து அறிவித்தல்கள் கிடைக்கப்பெற்ற போதும் அதனை அலட்சியம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேராயர்தெரிவித்தார்.

மக்களின் உயிர்களோடு விளையாட இடமளிக்க முடியாது என தெரிவித்த பேராயர் தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை நடவடிக்கைகளுக்கு சில தரப்பினர் அழுத்தம் கொடுக்க முனைவதுதெரிய வருவதாகவும் எவருக்கும் அது தொடர்பில் சந்தர்ப்பம் அளிக்கக்கூடாது என்றும் அவர் ஜனாதிபதியை க்கேட்டுக் கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நேற்றோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது..மேற்படிகுண்டுத்தாக்குதலில்பலியானோருக்கு அஞ்சலி நிகழ்வுகள் நேற்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்றன. அதனையடுத்து கருத்து தெரிவித்த போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை;

மேற்படி குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோர் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல இந்து பௌத்த மற்றும் வெளிநாட்டவர்களும் இதில் உள்ளடங்குகின்றன. பொருளாதார ரீதியிலும் இலங்கையை பெரும் வீழ்ச்சிக்கு புல்லாகி இந்த சம்பவம் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் அனைத்து மக்களும் எம்மோடு இணைந்து செயற்பட்டனர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.மேற்படி குண்டுத் தாக்குதலுக்கு பின்னணியில் செயற்பட்டவர்கள் நாட்டில் பெரும் குழப்பகரமான ஒரு சூழலை ஏற்படுத்த எதிர்பார்த்திருந்தனர்.

இன,மத ரீதியில் பெரும் குரோதங்களை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சித்தனர். அச்சமயம் நாம் எமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தி பொறுமையுடன் செயற்பட்டது குறிப்பிட வேண்டும். அந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.

மேற்படி தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என நாம் சரியாக இனம் காணுவது முக்கியமாகும். அத்தோடு இனி ஒரு போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதும் நமது பொறுப்பாகும்.

குண்டுத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடகாலம் நிறைவுற்ற போதும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் யார் என இனங்காண முடியாமல் உள்ளது. அவர்களே வழிநடத்தியவர் அவர்களுக்கு பல வழிகளிலும் உதவி செய்தோர். நிதி மற்றும் பல்வேறு வழிகளில் பின்னணியில் செய்யப்பட்டோர் என இதன் பின்னணியில் பெரும்பாலானோர் உள்ளனர். அவர்கள் ஒரு வலையமைப்பாக செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சரியாக இனங்காணப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறலாம்.

அரசியல் செல்வாக்கு பதவி தராதரம் என எந்த பாரபட்சமுமின்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாரென்று முழு உலகுக்கும் வெளிப்படுத்த வேண்டும்.

மேற்படி குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்த போதும் எமது அரசியல் உயர் மட்டத்தில் இருந்து அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராயர் கேட்டுக்கொண்டார்.

—-
இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த 11 பேரும் பேருவளை பகுதியில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் இதுவரை 321 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். .
இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இதுவரை 104 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 100 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

—–

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார்.
எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட போதே பேராசிரியர் இதனை தெரிவித்துள்ளதுடன், அவர் கொவிட் 19 வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் வைத்தியர்கள் புதிய கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மூலம் பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

—–

Related posts