கேப்டன்: விஜயகாந்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டு

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் டாக்டரின் உடலை எடுத்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, டிரைவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் என பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய இடம் கொடுத்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை பல்வேறு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, பக்கம் பக்கமாக அறிக்கை விடுபவர்கள் மத்தியில், பிரச்சினையை விளக்கும் தெளிவான அறிக்கை; விளம்பரத்திற்காக அல்ல, விழிப்புணர்வுக்காக. பேச்சோடு நிற்காமல் செயல்; உடனடியாக மனமுவந்து சொத்தை கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்- இவர் தலைவர். உடல்நலம் மட்டும் கைகொடுத்திருந்தால்… ஹூம்! என பதிவிட்டுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்ந்து தனது தாராள மனித நேயத்தை காட்டியிருக்கிறார். கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அவரது கல்லூரி மைதானத்தை கொடுத்திருக்கிறர். சார் நீங்கள் எப்போதும் ஒரு இன்ஸ்பையரேஷன். ஒரு உண்மையான தலைவர் மற்றும் மிகவும் உண்மையான ஆன்மா விஜயகாந்த். ப்ளீஸ் அவருடைய சென்ஸிபிள் அறிக்கையை படியுங்கள் என அவரது அறிக்கையையும் ஷேர் செய்திருக்கிறார்.

விஜயகாந்த் குறித்து இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட.. வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்… உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்.. என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகரும் இயக்குநருமான மனோபாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் என்ன ஒரு மனுஷன்.. வாழ்க கேப்டன்..என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக் நேற்றே நடிகர் விஜயகாந்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தது என்ன ஒரு மிக அற்புதமான மனிதர்…இந்த மகா மனிதரின் மனித நேயத்தின் முன்னால் தலை வணங்கி நெகிழ்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

Related posts