ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ தலைமையில், பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இச்செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சமூக சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தி பொருளாதார புத்தெழுச்சியை திட்டமிடுதல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய பொறுப்புகள் இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.
‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கைகளை அடிப்படையாக கொண்டு புதிய வாயில்களின் ஊடாக இந்நாட்டுக்கே தனித்துவமான பொருளாதார சட்டகமொன்றை அமைப்பதன் மூலம் உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும.
சுதேச கைத்தொழிலாளர்கள், தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் மக்கள் மைய பொருளாதாரமொன்றை தாபிப்பதற்கு இணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் செயலணியின் மற்றுமொரு பணியாகும்.
மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக சுகாதார, கல்வி செயலணிகளின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து உற்பத்திகளை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இச்செயலணியின் பணியாகும்.
எவரேனும் ஒரு அரச ஊழியர் அல்லது ஒரு அமைச்சு, அரச திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது வேறு அதுபோன்றதொரு நிறுவனம் இச்செயலணியினால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பினை நிறைவேற்றத் தவறுதல் அல்லது காலம்தாழ்த்துதல் அல்லது அதுபோன்ற அனைத்து சந்தர்ப்பங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரி 24, 2020 மார்ச் 24 ஆம் திகதிய வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயலணி மற்றும் 2020 மார்ச் 23ஆம் திகதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அதிக இடர்நிலைக்கு முகம்கொடுத்துள்ள மாவட்டங்களின் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்கு தேவையான சேவைகளை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றை தாபிப்பதற்குரிய ஏற்பாடுகள் இத்துடன் இரத்துச்செய்யப்படுகின்றது.
பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ, இச்செயலணியின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர்களான என்டன் பெரேரா மற்றும் டீ.எஸ்.ஜயவீர ஆகியோர் இணை செயலாளர்களாக உள்ளனர்.