இக்கட்டுக்கு விலக்கிக் காக்கும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) சங்கீதம் 32:7
நாம் அனைவரும் தினமும் பத்திரிகையில் படிக்கும் ஓர் செய்தி;, தொலைக்காட்சியில் பார்க்கும் செய்தி அல்லது முகநூல்மூலம் அறியும் செய்தி கொரோனாவின் அழிவைப் பற்றியதாகும். இதனால் மக்கள் செய்வது அறியாமல் தடுமாறுவதை காணக் கூடியதாக உள்ளது. அதேநேரம் பலசமைய வழிபாடுகளும் அதிக அளவில் நடை பெறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. காரணம் நாம் வணங்கும் தெய்வங்கள் நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். ஆனால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தி தேவனைத் தேடுவதை இன்னும் அதிகமாக காணக்கூடியதாக உள்ளது. அது ஏன்? என்று வேதம் மிகத்தெளிவாக கீழ்வரும்பகுதியில் தெளிவு படுத்துகிறது.
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என்எலும்புகள் உலர்ந்து போயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவாPர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான். அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். (சேலா.)
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என்கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்க வேண்டாம்.
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள். (சங்கீதம் 32: 1-11)
மனிதருக்கு ஏற்படும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளானாலும் தேவனை சாரும்போது, அவர்களை அவர் அவர்களின் எல்லா இக்கட்டுக்களிலும் இருந்து காத்து வருகிறார். இந்த உண்மையை நாம் அனுபவிக்க வேண்டுமானால் தேவனை சார்ந்து வாழு எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
ஒரு பெண் வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பின் நிமித்தமாக தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டு இறுதியாக ஆலயத்தில் வந்து தேவனிடம் அழுதுவிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி தன்னை மாய்த்துக்கொள்ள வந்திருந்தார்கள். போராட் டமான வாழ்க்கைக்கு ஆறுதலைத்தரும் தேவனுடைய வார்த்தையை அன்று அவள் கேட்டாள். அவள் கேட்ட தேவனின் வார்த்தை அவளின் முடிவை மாற்றியதுடன் புதிய நம்பிக்கையுடனான வாழ்விற்கு வழிகாட்டியது.
ஒருதடவை நான் வாழும் டென்மார்க்கில் தற்கொலைமூலம் கணவனை இழந்த மனைவியை சந்தித்து ஆறுதல் கூறும்படியாக அவர்களிடம் சென்றேன். கணவரின் அந்த கொடுரமான அந்த முடிவை அவர்களால் இன்றும் கூட மறக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஆறுதல்படுத்தினேன். அவர்கள் சொன்ன ஓர் விடையம் இன்றும் எனது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கணவருக்கு பல நண்பர்கள் இருந்தார்கள். தினமும் குடிப்பதற்கும் வேறு காரணங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். ஆனால் அவரை தீயபழக்கத்தில் இருந்து விடுதலைப்படுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை. ஆலோசனைகளும் கூறவில்லை. அதனால் நானும் பிள்ளைகளும் அப்பாவை இழந்து விட்டோம் என்று அழுகையின் மத்தியில் கூறினார்கள்.
எமக்குள் தேவன் வைத்தள்ள உயிரை நாம் அழித்துப்போட அதிகாரம் எமக்கு இல்லை. உயிரைக் கொடுப்பவரும், திரும்ப தம்மிடம் சேர்த்துக் கொள்பவரும் ஆண்டவர் ஒருவரே.
உன்னதத்தின் ஆறுதல் வாசகநேயர்களே, உங்களில் பலர் பலவகையான போராட்டம் நிறைந்த, நம்பிக்கையற்ற சூழலில் வாழ்து வருகிறீர்கள். தேவன் தமது அன்பினால் உங்களை தேற்றி ஆறுதற்படுத்த விரும்புகிறார். அந்த விருப்பத்திற்கு உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே ஒப்புக்கொடுங்கள். இருதயத்தை ஆராய்ந்து அறிகிற தேவன் உங்களுக்கு இரங்கி ஆறுதலைத்தருவார்.
அன்பின் ஆண்டவரே, துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக நீங்கள் இருப்பதை இன்று நான் அறிய உதவியதற்காக நன்றி அப்பா. துயரப்படும் நானும் உமது வார்த்தையின்மூலம் ஆறுதலையும், அமைதியையும், பயங்களற்ற வாழ்வை எனது வாழ்வில் கண்டடைந்து, தேவ ஆவியின்மூலம் தேவபராமரிப்பு நிறைந்த வாழ்வை அடைந்து கொள்ள உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.,