அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என்று ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலை மேலும் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உடனடி அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சென்னையில் காலை முதலே கடைகளில் கூட்டம் அதிகரித்துவிட்டது. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தங்களை மட்டுமே கவனித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளால் அரசுகள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள். இதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால், இன்று ஷாப்பிங் சென்றுள்ள மக்களைப் பழி சொல்லும் பிரபலங்களுக்கு இருக்கும் தனிச் சலுகை அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் உள்ளது. உங்கள் வட்டத்தைத் தாண்டியிருக்கும் உலகம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?”
இவ்வாறு சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.