கின்னஸ் சாதனை படைத்த நடிகை விஜய நிர்மலா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 1946-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி பிறந்தவர் விஜய நிர்மலா. தமிழில் பணமா பாசமா, என் அண்ணன், ஞான ஒளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த படத்தை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் உண்டு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 44 படங்களை இயக்கிய பெண் டைரக்டர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்தார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
விஜய நிர்மலா கடந்த வருடம் ஜூன் மாதம் தனது 73-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் விஜய நிர்மலா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே சாவித்திரி வாழ்க்கை கதை படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். எனவேதான் விஜய நிர்மலா கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று அணுகி உள்ளனர். இந்த படத்துக்கான மொத்த திரைக்கதையையும் தன்னிடம் வழங்கும்படியும் கதையை படித்த பிறகு நடிப்பது பற்றி முடிவை சொல்கிறேன் என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதனால் கதையை படக்குழுவினர் அவரிடம் ஒப்படைத்து உள்ளனர். கொரோனா பிரச்சினை முடிந்ததும் படவேலைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.