இந்தநிலையில், நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம்,
‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில்
செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
கோவில்களைப்போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச்செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது
தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். “கொரோனா தொற்று” காரணமாக இயல்பு வாழ்க்கைப்பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும் எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது.
அறிஞர்கள், ஆன்மீகப்பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களை கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும்
சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக்கையாண்டன.
நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்
என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் சூர்யா.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.