பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வர்மா’ ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆதித்ய வர்மா’. இது தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
ஆதித்ய வர்மா’ உருவாவதற்கு முன்பு, ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கினார் பாலா. அதில் துருவ் விக்ரம், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், அதன் இறுதி வடிவம் சரிவரத் திருப்தி தராததால், அந்தப் படத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.
‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனிடையே கடந்த சில மாதங்களாக பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
தற்போது அக்டோபர் 6-ம் தேதி ஓடிடி தளத்தில் ‘வர்மா’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. சிம்பிளி செளத் தளத்தில் இந்தியாவுக்கு வெளியே மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளமே இந்தியாவுக்கு வெளியே மட்டுமே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிம்பிளி செளத் தளத்தில் ‘வர்மா’ வெளியாகவுள்ளது உறுதியாகிவிட்ட நிலையில், படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு விளம்பரப்படுத்துதலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓடிடியில் ‘வர்மா’ அக்டோபர் 6-ம் தேதி !
