தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்து கொள்வதில் தப்பு இல்லை” என்று நடிகை சுஹாசினி கூறினார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் முதன்முதலாக, ‘இந்திரா’ என்ற படத்தை டைரக்டு செய்தார். 24 வருடங்களுக்கு பிறகு அவர், ‘காபி எனி ஒன்’ என்ற படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சுஹாசினி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ‘காபி எனி ஒன்’ எந்த மாதிரியான படம்?
பதில்:- இது, ஒரு மருத்துவ பிரச்சினை தொடர்பான குடும்ப கதை. இந்த கதையுடன், ‘கலா கேட்டரிங்’ என்ற இன்னொரு கதையும் என்னிடம் வந்தது. அந்த கதைக்கு நிறைய வெளிப்புற படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும். கொரோனா பரவலும், ஊரடங்கு உத்தரவும் இருந்ததால், அதை இப்போதைக்குள் படமாக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.
‘காபி எனி ஒன்’ வீட்டுக்குள்ளேயே நடக்கிற மாதிரி ஒரு கதை. எங்க அப்பா சாருஹாசன், என் தங்கைகள் அனுஹாசன், சுருதிஹாசன் ஆகியோருடன் எங்க அம்மாவையும் நடிக்க வைப்பது என்று முடிவு செய்தேன். குடும்பத்தின் மூத்த மகளாக நான் நடிப்பது என்று முடிவு எடுத்தேன்.
அந்த சமயத்தில், எங்க அப்பா குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டார். “என்னால் நடிக்க முடியாது. வேறு ஒருவரை வைத்து எடுத்துக்கொள்” என்று அப்பா கூறிவிட்டார். அப்பாவுக்கு பதில் டெல்லி குமாரை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகினேன். கொரோனா பயம் காரணமாக அவர் நடிக்க மறுத்து விட்டார். அடுத்து டெல்லி கணேசிடம் கேட்டேன். அவர், ‘பைபாஸ் ஆபரேசன்’ செய்திருப்பதாக கூறி நடிக்க மறுத்தார்.
கடைசியாக, காத்தாடி ராமமூர்த்தி நடிக்க சம்மதித்தார். அரசு விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு வீட்டிலேயே பெரும்பகுதி காட்சிகளை படமாக்கினேன். சுருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் ஐதராபாத்தில் படமாக்கினேன்.
கேள்வி:- 1996-ல் ‘இந்திரா’ படத்தை இயக்கியிருக்கிறீர்கள். அதன் பிறகு 24 வருடங்கள் கழித்து, ‘காபி எனி ஒன்’ படத்தை இயக்கியுள்ளீர்கள். இந்த நீண்ட இடைவெளிக்கு காரணம் என்ன?
பதில்:- ‘இந்திரா’ படத்துக்குப்பின், சில குறும் படங்களை இயக்கினேன். அது வெளியில் தெரியவில்லை. “அடுத்த படத்தை டைரக்டு செய்” என்று என் கணவர் மணிரத்னம் அடிக்கடி சொல்லி வந்தார். குடும்ப வேலைகளை கவனிக்க வேண்டியிருந்ததால், இயக்குவதில் கவனம் செலுத்த முடியவில்லை.
கேள்வி:- கொரோனா பிரச்சினை மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் களே…அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- அது தயாரிப்பாளர்களுக்கும், கதாநாயகர்களுக்கும் உள்ள பிரச்சினை. கேரளாவிலும், ஆந்திராவிலும் சில நடிகர்கள் 20 சதவீத சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சம்பள குறைப்பு செய்து கொண்டதில் தப்பு இல்லை.
கேள்வி:- 50 வயதை தாண்டிய பிறகும் அழ காக, இளமையான தோற்றத்துடன் இருக்கிறீர்களே…அந்த ரகசியத்தை கூற முடியுமா?
பதில்:- நான் சைவ சாப்பாடுதான் சாப்பிடுகிறேன். காலையில் யோகா செய்கிறேன். 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். வேறு ரகசியம் எதுவும் இல்லை.
கேள்வி:- உங்கள் மகனுக்கு எப்போது திருமணம்?
பதில் (சிரித்தபடி):- இன்னும் 2 வருடங்கள் போகணும். அவனுக்கு இன்னும் படிப்பு முடியவில்லை.
இவ்வாறு சுஹாசினி கூறினார்.