டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை ‘மூக்குத்தி அம்மன்’ பெற்றுள்ளது.
என்.ஜே.சரவணன், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை கலந்த சமூகத் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தத் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் தற்போது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய படத்தின் இயக்குநர்களில் ஒருவரும், படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவருமான ஆர்ஜே பாலாஜி, ” ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை எடுக்கும்போது, அதை எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம்.
ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானதன் மூலம் இன்று அந்தக் கனவு நனவாகியுள்ளது. கதையின் நோக்கம் ஆழமானதாக இருக்கும்போது நகைச்சுவையைக் கொண்டு வருவது கடினம்.
ஆனால், படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இந்தத் தீபாவளியன்று தங்களின் வீட்டுக்கே எங்களை வரவேற்று இந்தத் திரைப்படத்தை பெரிய வெற்றிபெறச் செய்த அனைத்து ரசிகர்களுக்கும் மூக்குத்தி அம்மனின் ஒட்டுமொத்தக் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதிகம் பார்க்கப்பட்ட தமிழ்த் திரைப்படமானது ‘மூக்குத்தி அம்மன்’
