வாடிவாசல்’ படம் தொடர்பாக பரவிய வதந்திக்குத் தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் எனத் தெரிகிறது.
பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு முன்பாகவே வெளியிடப்பட்டது. ‘வாடிவாசல்’ தொடங்கும் முன்பு, சூரி நடிக்கும் படம் மற்றும் தனுஷ் நடிக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.
இந்நிலையில், திடீரென்று தாணுவின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் பெயரில் போலி ட்விட்டர் கணக்குத் தொடங்கி தவறான தகவலைப் பரப்பினார்கள். இதில் வந்த ட்வீட்களை வைத்து ‘வாடிவாசல்’ கைவிடப்பட்டது எனத் தகவல் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக தாணு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல. என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். ‘வாடிவாசல்’ பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும். வாகை சூடும்”.
இவ்வாறு தாணு தெரிவித்துள்ளார்.
வாடிவாசல்’ வதந்தி: தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி
