‘மாஸ்டர்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், ‘சுல்தான்’, ‘சக்ரா’ ஆகிய படங்கள் தங்களுடைய முடிவை மாற்றியுள்ளன.
ஜனவரி 13-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே வசூல் எப்படியிருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தனர். ஆனால், படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
மாஸ்டர்’ படக்குழுவினரோடு இதர படங்களின் தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். ஏனென்றால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தொடங்கிவிட்டால் தங்களுடைய படத்தையும் திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். தற்போது ‘மாஸ்டர்’ வசூலால் ஓடிடி வெளியீட்டை சில படங்கள் கைவிட்டுவிட்டன.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கியுள்ளன. இரண்டுமே திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. பிப்ரவரியில் ‘சக்ரா’ படத்தையும், ஏப்ரலில் ‘சுல்தான்’ படத்தையும் வெளியிடத் தீர்மானித்துள்ளார்கள்.
‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்டமான வசூலால்தான், இந்த இரண்டு படங்களுமே தங்களுடைய முடிவை மாற்றியதாக வார்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முடிவை மாற்றிய சுல்தான், சக்ரா
