பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.
‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. தற்போது 2டி நிறுவனம் தயாரித்து வரும் படமொன்றில் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கு, பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக அதில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார். தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனப் படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என அழைத்து வருகிறது படக்குழு. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ்
