இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரிட்டன் தலைமையிலான உறுப்பு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக பேரவையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் இப் பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இந்தியா தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லையென்பதுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த, இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 15நாடுகள் தீர்மானத்தை நகர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்கள் குறித்தும் முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு விடுக்கப்படும்.
அத்தோடு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் சுயாதீன செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் தீர்மானம் அரசாங்கத்தை கோரும் என்பது குறிப்பிடத்தக்கது.