ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தில் தென்கொரிய நடிகை பே சூஜி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படம், படப்பிடிப்புத் தளத்தில் விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
அதற்கு முன்னதாகவே ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது.
இதில் நாயகனாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் நடிக்கவுள்ளார். அவரோடு நடிக்க தென்கொரிய நடிகை பே சூஜியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. அவர் நாயகியாக நடிக்கவுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்.
மேலும், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
ஷங்கர் – ராம் சரண் படத்தில் தென்கொரிய நடிகை?
